(இரோஷா வேலு)

போலி ஆவணங்களை தயாரித்து இலங்கை அரச நிறுவனங்களில் வேலைவாய்ப்பினை பெற்றுத்தருவதாக மக்களை ஏமாற்றி நிதி மோசடியில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவர் உள்ளிட்ட இருவரை நேற்று கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இச்சம்பவத்தில் ரத்மலானை புகையிரத விடுதியில் வசித்துவரும் 52 வயதுடைய பெண்ணொருவரும், அதே பகுதியில் வசித்துவரும் 29 வயதுடைய ஆணொருவரும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

கல்கிஸ்ஸை பொலிஸாருக்கு மோசடி சம்பவங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற பல்வேறு முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போதே குறித்த இருவரும்  இன்று கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரத்மலானை புகையிரத விடுதியிலிருந்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் சுகாதார அமைச்சு, புகையிரத திணைக்களம் மற்றும் மனிதவள சபைகள் போன்ற அரச நிறுவனங்களில் வேலைவாய்ப்பினை பெற்றுத் தருவதாக கூறி ஒருவரிடமிருந்து ஒரு இலட்சம் ரூபா வரையான ஆரம்ப தொகையை பெற்றுக்கொண்டுள்ளனர்.

இதற்காக குறித்த நபர்கள் அரச தலைப்பிடப்பட்ட பல்வேறுபட்ட போலி ஆவணங்களை பயன்படுத்தி வந்துள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

இந்நிலையில் குறித்த இருவரையும் கைதுசெய்துள்ள கல்கிஸ்ஸை பொலிஸார் அவர்களை இன்று கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டிருந்ததுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.