(நா.தனுஜா)

'எங்களுடைய அறநெறி பாடசாலை மாணவிக்கு திடீரென நுரையீரல் சத்திரசிகிச்சைக்காக 80 இலட்சம் ரூபா பணம் தேவைப்பட்ட போது அதனை சேகரிப்பதற்கு மிகுந்த சிரமப்பட்டோம். குழுவாக இன்றி தனித்தனியாக பணம் சேர்த்து ஒருவாறு இந்தியாவில் அம்மாணவிக்கான சத்திரசிகிச்சை வெற்றிகரமாக முடிந்துவிட்டது. இப்போது அவள் நலமாக இருக்கின்றாள். 

ஆனால் இவ்வாறானதொரு சம்பவம் எதிர்காலத்தில் நிகழும் பட்சத்தில் அதனை எதிர்கொள்வதற்கு முன்னாயத்தமாக இருக்க வேண்டும் எனத் தோன்றியது. எமது பிரதேச தமிழ் மக்களைக் கொண்ட ஒரு அமைப்பு மூலம் இவ்வாறான உதவிகள் தேவைப்படுவோருக்கு உடனடியாக உதவ முடியும் என்பதாலும் அதனைவிட பல்வேறு சமூகசேவை செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும் என்பதாலும் வரக்காப்பொல தமிழ் சமூக அபிவிருத்தி பேரவையை நிறுவினோம்" என கண்களில் ஆர்வம் மின்ன பேசுகின்ற கோமதி வரக்காப்பொல தமிழ் சமூக அபிவிருத்தி பேரவையின் தலைவி என்பதுடன் காளிகாம்பாள் அறநெறி பாடசாலையின் அதிபராகவும் இலங்கை மனித உரிமை அமைப்பின் உறுப்பினராகவும் செயற்பட்டு வருகின்றார். 

சமூகசேவையை பிரதான நோக்காகக் கொண்டு வரக்காப்பொல தமிழ் சமூக அபிவிருத்தி  பேரவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பேரவையின் உத்தியோகபூர்வ திறப்புவிழா இடம்பெறவுள்ள  நிலையில் அதன் தலைவி கோமதியிடம் பேசினோம். 

அவருடனான நேர்காணல் வருமாறு,

கேள்வி - அறநெறி பாடசாலையின் அதிபரான நீங்கள் தற்போது ஒரு சமூக அபிவிருத்திக்கான அமைப்பினை நிறுவியுள்ளீர்கள். இதன் பின்னணி என்ன?

பதில் - தற்போது 160 மாணவர்கள் கற்கும் அறநெறி பாடசாலை ஆரம்பத்தில் 12 மாணவர்களுடனேயே ஆரம்பிக்கப்பட்டது. வரக்காப்பொல பிரதேசத்தில் பெருமளவான சிங்களவர்களே வசிக்கின்றனர். இங்கு முன்புவரை தமிழ் மாணவர்கள் கல்வி பயில்வதற்கான பாடசாலையொன்று இருக்கவில்லை. 

ஆனால் எமது அறநெறி பாடசாலையின் மூலம் திறமையான தமிழ் மாணவர்களை இனங்கண்டு கொண்டோம். அதனூடாக சிங்களப் பாடசாலையொன்றில் தமிழ் மாணவர்களுக்கான பிரிவு ஒன்றினை உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. அதேநேரம் எமது அறநெறி பாடசாலை மாணவியொருவருக்கு திடீரென ஈரல் சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய தேவையேற்பட்டது. எனினும் அவளின் வீட்டாரிடம் அதற்கான போதிய வசதிகள் காணப்படாத நிலையில் பிரதேச மக்களிடம் இவ்விடயம் தொடர்பில் பகிர்ந்து கொண்டோம்.

ஊரார் பகுதி பகுதியாக திரட்டிய நிதியைக் கொண்டு இந்தியாவில் வெற்றிகரமாக சத்திரசிகிச்சையை மேற்கொண்டதுடன், அம்மாணவி இப்போது நலமாக இருக்கின்றாள். இந்த சம்பவமே நாம் ஒரு அமைப்பாக ஒன்றிணைய வேண்டும் என்ற எண்ணத்திற்கு அடிப்படையாக அமைந்தது. எமது பிரதேசத்தில் வேறு எவரேனும் இவ்வாறான இக்கட்டான சூழ்நிலைகளை எதிர்கொள்கையில் அவர்களுக்கு உதவும் வகையில் முன்னாயத்தமாக இருக்க வேண்டும் என்பதே வரக்காப்பொல தமிழ் சமூக அபிவிருத்தி பேரவையின் அடிப்படை நோக்கம்.  

கேள்வி – வரக்காப்பொல தமிழ் சமூக அபிவிருத்தி பேரவையின் அங்கத்துவம் எவ்வாறாக அமையும்?

பதில் - இவ்வமைப்பின் தலைவராக நான் செயற்படுகின்றேன். அதேவேளை வரக்காப்பொல மக்களில் 25 பேர் வரையில் தற்போது உறுப்பினர்களாக உள்ளனர். இவ்வமைப்பில் வரக்காப்பொல தவிர்ந்த வேறு பிரதேசங்களைச் சேர்ந்தவர்களும் இணைந்துகொள்ள முடியும். தற்போது ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு என்பதனாலும் பிரதேசவாசிகளே அமைப்பின் அங்கத்தவர்கள் என்பதனாலும் அங்கத்துவக் கட்டணத்தின் தொகையினை நிர்ணயிக்கவில்லை. தத்தமது இயலுமையின் அடிப்படையில் உதவிகளை மேற்கொள்ள முடியும். 

கேள்வி – வரக்காப்பொல தமிழ் சமூக அபிவிருத்தி பேரவையின் எதிர்கால செயற்பாடுகள் எவ்வாறானதாக அமைந்திருக்கும்?

பதில் - இவ்வமைப்பின் உருவாக்கத்திற்கு அடிப்படையாக அமைந்த அறநெறி பாடசாலையின் மூலம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் யாவும் திறம்பட அமைந்தன. அவையே அமைப்பினை நடத்துவதற்கான தன்னம்பிக்கையை விதைத்துள்ளது. 

இவ்வமைப்பின் மூலம் மலையக மாணவர்களின் கல்வியை ஊக்குவிப்பதை நோக்காக கொண்ட திட்டங்களை செயற்படுத்த தீர்மானித்துள்ளோம். கல்வியினை அவசியமானதாக கருதாமையே மலையகத்தின் பிரதான குறைபாடாகும். அதன் அவசியத்தை மலையகப் பெற்றோர்களுக்கு உணர்த்தும் வகையிலான விழிப்புணர்வு நடவடிக்கைளை மேற்கொள்ளவுள்ளோம். அத்தோடு கேகாலை, வரக்காப்பொல, யட்டியாந்தோட்டை பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில் கல்விசார் முன்னேற்றம் மற்றும் கலை கலாசார விருத்தித் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்.

தனது குடும்ப பணிகள் கடந்து சமூக நோக்கில் செயற்படும் கோமதியின் வார்த்தைகளில் நினைத்தவற்றை சாதிப்பதற்கான உறுதியும் தன்னம்பிக்கையும் நிறைந்திருக்கின்றது. அவரின் சமூகத்தை நோக்கிய செயற்பாடுகளும் அதற்கான ஆரம்ப புள்ளியான வரக்காப்பொல தமிழ் சமூக அபிவிருத்தி பேரவையும் சமூகத்திற்கு நன்மை பயக்கும்.