(இரோஷா வேலு) 

கடந்த ஒன்றரை வருட காலப் பகுதிக்குள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 114 தங்கக் கடத்தல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டதாகவும் அவற்றின் போது 114 கிலோவுக்கும் கூடுதலான தங்கம் கைப்பற்றப்பட்டதாகவும் சுங்கத் திணைக்கள புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2017 ஆம் ஆண்டு முழுவதும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து 65 தங்க கடத்தல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன. இதில் 62.093 எடையுடைய தங்கம் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட தங்கத்தின் மொத்த பெறுமதி 289,239,715 ரூபாவாகும். இதில் தொடர்புடையவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகை 15,278,465 ரூபாவாகும். 

இவ்வருடம் ஜனவரி முதல் ஜூலை வரையான காலப்பகுதியில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து 49 தங்க கடத்தல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன. இவற்றின் போது 62.093 கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளது. இதன் மொத்த பெறுமதி 380,740,050 ரூபாவாகும். இதில் தொடர்புடையவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகை 25,703,250 ரூபாவாகும். 

இவ்வருடம் சுங்க பிரிவினரால் முறியடிக்கப்பட்ட தங்க கடத்தல் முயற்சிகளின் 32 சம்பவங்களுடன் இலங்கையரும், 17  சம்பவங்களுடன் வெளிநாட்டு பிரஜைகளும் தொடர்புபட்டுள்ளனர். இவற்றில் 28 கடத்தல் முயற்சிகள் இலங்கை சுங்கத்தின் புலனாய்வு பிரிவு அதிகாரிகளின் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளன. 

மேலும் வடக்கு யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட ஐந்து தங்க கடத்தல் முயற்சிகளும் முறியடிக்கப்பட்டுள்ளன. இதன்போது, 49.5 கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளது. இவற்றின் மொத்த பெறுமதி 311,729,350 ரூபாவாகும். இச்சம்பவங்களில் கைதுசெய்யப்பட்டவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகை 4,000,000 ரூபாவாகும்.