(நா.தனுஜா)

சமாதானம், நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் நல்லிணக்கம் என்பவற்றை உள்ளடக்கிய எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப ஒன்றிணைந்து செயற்படுவோம் என கனேடிய பிரதமர் ஜஸ்டீன் ரூடோ தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கறுப்பு ஜூலை இனக்கலவரம் இடம்பெற்று நேற்றுடன் 35 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் கனேடிய பிரதமர் இலங்கைக்கு விடுத்துள்ள அனுதாபச் செய்தியிலேயே மேற்கொண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 

 

கனடா மிக நெருக்கமாக இலங்கை அரசாங்கம் மற்றும் சிவில் அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேணிவருவதுடன் ஒன்றிணைந்து செயற்பட்டு வருகின்றது. அதுமாத்திரமன்றி இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்தல் மற்றும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை உருவாக்கல் என்பன தொடர்பில் இலங்கை அரசாங்கம் மற்றும் சிவில் அமைப்புக்களை ஊக்குவித்து வருகின்றது. 

அர்த்தமுள்ள நேர்மையானதும் வெளிப்படைத் தன்மையானதுமான நல்லிணக்க செயன்முறைகளை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதன் மூலம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையையும் உறுதியையும் வென்றெடுக்க முடியும். 

இது போன்றதொரு நாளில் 1983 ஆம் ஆண்டில் ஏற்பட்ட இனக்கலவரத்தால் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியானதுடன் அநேகமானோர் தமது சொந்த வாழ்விடத்தை விட்டு இடம்பெயரும் நிலையும் ஏற்பட்டது. கறுப்பு ஜுலை கலவரம் ஒருவார காலத்திற்கு இடம்பெற்ற மிகப் பாரதூரமான வன்முறை என்பதுடன் பல தசாப்தங்கள் கடந்தும் ஒருவித அச்சத்தை ஏற்படும் வகையிலான இனக்கலவரம் என்பது குறிப்பிடத்தக்கது. 

இலங்கையில் கலவரத்தால் பாதிப்படைந்த மக்களுக்கு உதவும் வகையில் 1983 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் கனேடிய அரசாங்கம் விசேட திட்டமொன்றினை அறிமுகம் செய்தது. அதன்மூலம் 1800 க்கும் மேற்பட்ட தமிழர்கள் கனடாவில் தமக்கான பாதுகாப்பையும் சுதந்திரத்தையும் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டது. அத்தோடு இலங்கை  பிரஜைகள் எமது நாட்டின் முன்னேற்றத்திற்கு பல்வேறு வகையிலும் பங்களிப்புச் செய்துள்ளனர். அதற்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.