(எம்.சி.நஜிமுதீன்)

நாட்டில் மிகவும் கஷ்டத்திற்கு மத்தியில் வாழும் மக்களிடமிருந்து பெறப்பட்ட வரியைக்கொண்டு புலிகளுக்கு நஷ்ட ஈடும் வழங்கும் வகையிலான சட்டமூலம் ஒன்றை அரசாங்கம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஏழாம் திகதி பாராளுமன்றிற்கு கொண்டுவரவுள்ளது. எனவே குறித்த சட்டமூலத்திற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்றிலும் பாராளுமன்றிற்கு வெளியிலும் போராட்டங்களை நடத்தவுள்ளதாக அவ்வெதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. 

கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கொழும்பு ஸ்ரீவஜிராஷர்ம பெளத்த நிலையத்தில் நடைபெற்றது. அதில் அவ்வெதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயகொடி கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

"எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஏழாம் திகதி பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் “இழப்புக்கான எதிரீடுகள் பற்றிய அலுவலகம்” தொடர்பிலான சட்டமூலமும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த சட்டமூலத்தை கடந்த ஜூன் மாதம் 22 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிட்டுள்ளனர். 

அச்சட்டமூலமானது வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற யுத்தத்தின்போது காணாமல் போனோர்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கான ஏற்பாடுகளாகும். எனவே நாட்டில் மிகவும் கஷ்டத்திற்கு மத்தியில் வாழும் மக்களிடமிருந்து பெறப்பட்ட வரியைக்கொண்டு புலிகளுக்கு நஷ்ட ஈடு வழங்கும் நடவடிக்கையே இது. சட்டமூலத்தின் 27ஆம் பிரிவில் வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற பிரச்சினைகளின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கே நஷ்டஈடு வழங்கப்படவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் காணாமலாக்கப்பட்டவர்களை பாதுகாப்பதற்கான சர்வதேச சமவாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு பலாத்காரமாக காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்குவதாகவும் அச்சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்த காரியாலயம் அமைக்கும்போது குறித்த சட்ட ஏற்பாடுகள் கடந்த காலங்களுக்குப் பொருந்தாதெனவும் அது எதிர்காலத்திற்ககே பொருந்தவுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்தது. எனினும் தற்போது கடந்த காலங்களில் காணாமல் போனோர்கள் தொடர்பிலும் நஷ்டஈடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எனவே குறித்த சட்டமூலம் குறித்து நேற்று  உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளோம்.  மேலும் அந்த சட்டமூலத்திற்கு எதிராக பாராளுமன்றத்திலும், பாராளுமன்றத்திற்கு வெளியிலும் போராட்டங்களை மேற்கொள்ளவுள்ளோம்." என தெரிவித்தார்.