எம்.எம்.மின்ஹாஜ்

"புதிய அரசியலமைப்பினை தயாரிப்பதற்கான பணிகளை நாம் கைவிடவில்லை. அதனை ஒரு வருடத்தில் முடித்து விட முடியாது. நீண்ட காலம் தேவைப்படும். சர்வஜன வாக்கெடுப்புக்கும் செல்ல வேண்டியுள்ளது. ஆகவே அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் புதிய அரசியலமைப்பினை தயாரிப்பதற்கான முயற்சிகளை முன்னெடுப்போம்" என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்தது.

முன்னாள் ஜனாதிபதியும் புதிய அரசியலமைப்பினை தயாரிப்பதாக வாக்குறுதி அளித்திருந்தார். எனினும் நிறைவேற்றவில்லை என்றும் அக்கட்சி சுட்டிக்காட்டியது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கருத்து வெளியிடுகையிலேயே  சுற்றாடல் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அஜித் மானபெரும மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

"முன்னைய ஆட்சியின் போது நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டது. கடனை டொலரின் ஊடாகவே பெற்றுக்கொண்டனர். கடன் பெற்றே கல்விக்கும் சுகாதாரத்துக்கும் நிதி ஒதுக்கீடுகளை செய்தனர்.

கப்பல் வராத துறைமுகத்தை நிர்மாணித்தனர். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வழிநடத்தி செல்வதற்கு 2016 ஆம் ஆண்டு கணக்கின் படி 4,687 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது. என்றாலும் இந்த துறைமுகத்தின் ஊடாக எந்தவொரு பிரதிபலனும் கிடைக்கவில்லை. நாட்டுக்கு நட்டமே ஏற்பட்டது. அதுபோன்றே விமான நிலையத்திற்கும் அதே நிலைமையாகும்.

இந்நிலையில் நாம் நாட்டை பொறுப்பேற்று தற்போது சாதகமான நிலைமைக்கு நாட்டை கொண்டு வந்துள்ளோம். கடன் செலுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்க செய்துள்ளோம். வெளிநாட்டு முதலீடுகளை நாட்டுக்கு கொண்டு வந்து ஏற்றுமதி வருமானத்தை மேலும் அதிகரிப்போம்.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் காலத்தில் திறந்த பொருளாதார கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பின்னர் ஆர். பிரேமதாஸவின் ஆட்சிகாலத்தில் 200 ஆடை தொழிற்சாலைகள் நிர்மாணிக்கப்பட்டன. ஆனால் தற்போது ஆடை தொழிற்சாலைகள் பல மூடப்பட்டு வருகின்றன. திறந்த பொருளாதார கொள்கை தற்போது நாட்டுக்கு ஒத்துவராது. வர்த்தக ஒப்பந்தங்களுடன் நாட்டை முன்னேற்றம் செய்ய வேண்டும்.

சிங்கப்பூருடன் நாம் மேற்கொண்ட உடன்படிக்கையினால் எமது பண்டங்களுக்கும் ஏற்றுமதி பொருள்களுக்கும் வரிச்சலுகை கிடைக்கும். இதன்ஊடாக வெளிநாட்டு முதலீடுகளும் அதிகரிக்கும். ஆனால் தற்போது வைத்தியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்படுவதற்கு தயாராகி வருகின்றனர். பொருளாதார நிபுணர்களின் வேலைகளை வைத்தியர்களினால் செய்ய முடியாது. பொருளாதார நலனை கருத்திற்கொண்டு பொருளாதார நிபுணர்கள் அரசாங்கத்திற்கு இவ்வாறான திட்டங்களை வலியுறுத்தி வருகின்றனர். அதற்கு அப்பால் வைத்தியர்களுக்கு இது தொடர்பாக என்ன அனுபவம் உள்ளது. 

மருத்துவ துறையில் ஏதும் குறைப்பாடுகள் நிலவியிருந்தால் வைத்தியர்கள் போராட்டம் நடத்துவதில் எந்தவொரு பிரச்சினையும் கிடையாது. வைத்தியர்கள் நாட்டின் நலனுக்காக செயற்பட வேண்டும்.

அத்துடன் சிங்கப்பூர் ஒப்பந்தம் கிடைக்கவில்லை என எதிரக்கட்சியினர் கூறுகின்றனர். எனினும் சிங்கப்பூர் ஒப்பந்தம் கைச்சாத்திட்ட அடுத்த கையோடு நாம் ஒப்பந்தங்களை 225 பேருக்கு வழங்கினோம். அந்த ஒப்பந்தம் ஆங்கிலத்தில் உள்ளது என்றால் தம்மிடம் உள்ள வசதிகளை கொண்டு மொழிபெயர்ப்பு செய்துக்கொள்ள வேண்டும்.

இது போன்றுதான் சுவசெரிய அம்பியுலன்ஸ் திட்டத்திற்கும் வைத்தியர் சங்கத்தினர் எதிர்ப்பு வெளியிட்டனர். ஆனால் அதன் மூலம் கிடைக்கும் பிரதிபலனை நாடே கண்டுக்கொண்டது. தற்போது மேல், தென் மாகாணங்களில் நடைமுறைப்படுத்தி வருகின்றோம். மேலும் சென்ற வாரம் வடக்கிலும் குறித்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 

அத்துடன் நாமல் ராஜபக்ஷ புதிய அரசியலமைப்பு வராது என கூறியுள்ளார். தற்போது அமுலில் உள்ள அரசியலமைப்பில் 19 திருத்தங்களை செய்துள்ளோம். இதனை மாற்ற வேண்டும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதிய அரசியலமைப்பினை கொண்டு வருவதாக வாக்குறுதி அளித்திருந்தார். அது ஒரு வருடத்தில் கொண்டு வருவதாக கூறினார். ஆனால் எதுவும் செய்யவில்லை. 

என்றாலும் நாம் புதிய அரசியலமைப்பினை தயாரிப்பதற்கான பணிகளை ஆரம்பித்துள்ளோம். அதற்கான பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்று வருகின்றன.

புதிய அரசியலமைப்பினை தயாரிப்பதற்கான பணிகளை நாம் கைவிடவில்லை. அதனை ஒரு வருடத்தில் முடித்து விட முடியாது. நீண்ட காலம் தேவைப்படும். சர்வஜன வாக்கெடுப்புக்கும் செல்ல வேண்டியுள்ளது. இது ஒரு நீண்டகால செயல் முறையாகும். ஆகவே அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் புதிய அரசியலமைப்பினை தயாரிப்பதற்கான முயற்சிகளை முன்னெடுப்போம்" என்றார்.