முல்லைத்தீவு மாவட்டத்தில் கடற்தொழிலாளர்கள், எதிர்கொள்ளும் பிரச்சனை தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் கூட்டம் ஒன்று இன்று  காலை 10.00 மணியளவில் கள்ளப்பாடு புனித அந்தோனியார் கோவிலுக்கு அருகில் உள்ள மீனவ மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் அமைப்பின் தலைவர் ஜெயா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவனேசன், வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன்,கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திரு.பிரதாபன்,கடற்படை அதிகாரிகள், பொலீஸ் அதிகாரிகள் கடற்தொழில் நீரியல்வளத்திணைக்கள பரிசோதகர், கடற்தொழில் அமைப்புக்கள் மற்றம் கடற்தொழிலாளர்கள் என பலர் கலந்துகொண்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் கடற்தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பில் இறுதியான தீர்மானம் எடுப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இக் கலந்துரையாடலில் எதுவித முடிவுகளும் எட்டப்பாடாத நிலையில் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் உள்ளிட்ட கடற்தொழில் அமைப்பினை சார்ந்தவர்கள் மற்றும் கடற்தொழிலாளர்கள் ஒன்றாக திரண்டு முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் திணைக்கள அலுவலகத்தினை முற்றுகையிட்டுள்ளார்கள்.

சுமார் ஒரு மணிநேரம் அலுவலகத்திற்கு முன்னாள் முற்றுகையிட்ட மக்கள் கடற்தொழில் திணைக்கள அதிகாரி வந்து தங்கள் பிரச்சனைக்கு தீர்வு காணும் வரை வீதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

இந் நிலையில் நீரியல்வளத்திணைக்கள அதிகாரி நீதிமன்றத்திற்கு சென்றிருந்த காரணத்தால் அதிகாரியினை வெளியில் வருமாறு மக்கள் குரல்கொடுத்துள்ளார்கள்.

குறித்த அதிகாரியின் ஊர்தி திணைக்களத்திற்குள் நின்ற காரணத்தால் மக்களை ஏமாற்றும் செயல் என ஆர்ப்பாட்டத்தில் நின்ற கடற்தொழிலாளர்கள் சத்தமிட்டுள்ளதை தொடர்ந்து பொலிஸார் திணைக்களத்திற்குள் சென்று அதிகாரி உள்ளாரா? எனபார்த்தபோது அங்கு அதிகாரி இல்லை இந் நிலையில் நீதிமன்றத்தில் இருந்து குறித்த அதிகாரி திணைக்களத்திற்கு வருகைதந்தபோது வசாலிலே மறித்த மக்கள் தங்கள் கோரிக்கையினை முன்வைத்துள்ளார்கள்.

ஆயிரத்திற்கும் அதிகமான கடற்தொழிலாளர்கள் கையெழுத்திட்ட மனுவினை வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் கடற்தொழில் நீரியல்வளத்திணைக்கள அதிகாரியிடம் கையளித்துள்ளர்.

அந்த மனுவில்,

"முல்லைத்தீவு மாவட்டத்தில் கடற்பரப்பில் சட்டவிரோத தொழில் நடவடிக்கை மிகமோசமாக நடைபெற்று வருகின்றது இதுவிடயமாக பல தடவைகள் தெரியப்படுத்தியும் இன்று வரை தீர்வு கிடைக்கவில்லை கடற்தொழிலாளர்கள் வறுமையில் வாடுகின்றார்கள். எனவே வெளிச்சம் பாய்ச்சிமீன்பிடிப்பது, வெடிவைத்து மீன்பிடித்தல், லைலா வலை மீன்பிடித்தல், சுருக்குவலைமூலம் மீன்பிடித்தல்,சங்கு பிடித்தல் அட்டைபிடித்தல் போன்ற தொழில் நடவடிக்கையினை உடன் நிறுத்த வேண்டும் இதற்காக கொடுக்கப்பட்ட அனுமதிகளும் உடனடியாக இரத்து செய்யப்படவேண்டும்" என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது கருத்து தெரிவித்த கடற்தொழில் நீரியல்வளத்திணைக்கள அதிகாரி வி.கலிஸ்ரன்,

"முல்லைத்தீவு கடலில் லைட்பாவித்து மீன்பிடிக்கும் நடவடிக்கை அதிகளவில் இருந்துள்ளது இது தொடர்பில் நேற்றில் இருந்து அதற்கான சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இரண்டு படகுகள் கைதுசெய்யப்பட்டுள்ளது. அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளோம் அவர்களை எதிர்வரும் 15ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளது.

லைட்பாவித்து மீன்பிடிப்பவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை நாங்கள் தொடர்ந்து மேற்கொள்வோம் இதில் சுருக்குவலை காலை 6 மணிதொடக்கம் மாலை6 மணிவரை தொழில் செய்யலாம் ஒன்றரை இஞ்சிக்கு மேல் உள்ள கண் அளவினை பாவித்து தொழில் செய்யலாம். அந்த நிபந்தனைக்கு அமையவே நாங்கள் அனுமதிப்பத்திரம் வழங்கியுள்ளோம்.

அவர்கள் சட்டத்திற்கு முரணான வகையில் நடத்துகொண்டால் அவர்களின் அனுமதிகள் இரத்து செய்யப்படும்.இவ்வாறான சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையினை கட்டுப்படுத்த கடற்தொழில் மக்களின் ஒத்துழைப்புடன் இன்று தொடக்கம் அனைத்தும் கட்டுப்படுத்தப்படும். இதேவேளை இவ்வாறு சுருக்குவலைகள் செய்வதாயின் பத்து கடல் மையிலுக்கு அப்பால்தான் செய்யவேண்டும்." என்றும் தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் அமைப்பின் தலைவர் ஜெயா,

"இன்று நடத்திய போராட்டத்தில் மீன்பிடி திணைக்களத்தினை முற்றுகையிட்டு எமது கோரிக்கையினை முன்வைத்துள்ளோம். சட்டவிரோத நடவடிக்கைககள் அனைத்தும் இன்றில் இருந்து முல்லைத்தீவு மாவட்டத்தில் தடைசெய்யவேண்டும் என்று மக்கள் ஏகோபித்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார்கள் சுருக்கு வலைக்கான அனுமதிகளை மீள பெற்றுக்கொள்ளல் என்றும் கடற்தொழில் நீரியல்வளத்திணைக்கள அதிகாரி வாக்குறுதி அளித்துள்ளார்.

கடற்தொழில் நீரியல்வளத்திணைக்கள அதிகாரி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றா விட்டால் மக்கள் பாரிய அளவில் போராட்டத்தினை நடத்தி கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களத்தினை மூடும் நிலைப்பாட்டினை எடுப்போம்" என்று தெரிவித்துள்ளார்.