(நா.தனுஜா)

மின்சார விபத்துகளில் இருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து அவர்களுக்கு அறிவூட்டும் செயன்முறைகளை முன்னெடுக்கவிருக்கும் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார உபகரணங்களுக்கான தேசிய நியமம் ஒன்றையும் அறிமுகம் செய்யத் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக விளக்கமளிப்பதற்காக ஆணைக்குழுவின் அலுவலகத்தில் அதன் பரிசோதனை பணியகத்தின் பணிப்பாளர் நிலந்த சபுமானகே ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடல் ஒன்றை இன்று ஏற்பாடு செய்திருந்தார். 

அச்சந்திப்பில் இவ்விடயம் தொடர்பில் அவர் தெளிவுபடுத்துகையில்,

மின்சார விபத்துக்களில் மரணமடைவோரினதும், பாதிக்கப்படுவோரினதும் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட மின்தாக்குதல் பாதிப்பு தொடர்பிலான ஆய்வில் கடந்தவருடம் நாடுபூராகவும் 106பேர் மரணமடைந்தார்கள். அதற்கு முதல்வருடம் 98பேரும், 2015இல் 95பேரும், 2014இல் 74பேரும் மரணமடைந்தார்கள் என்றும் அவர் தெரிவித்தார். 

சட்டவிரோதமாக மின்னிணைப்புக்களை பெறுவது போன்ற முறைகேடான செயற்பாடுகள் மின்தாக்குதல் மரணங்களுக்கு பெருமளவில் காரணமாக இருப்பதால் அவற்றைத் தடுப்பதற்கு மின்சாரப் பணியாளர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கும் நடைமுறையொன்று அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது.

தேசிய தொழில் தகைமைப் பரீட்சையில் தரம் மூன்றில் சித்தியடைந்த மின்சாரப் பணியாளர்களுக்கே அனுமதிப்பத்திரம் வழங்கப்படும். தற்போது மின்சாரப் பணியாளர்களாகச் செயற்படுபவர்களில் அந்தத் தகைமையைப் பெற்றிராதவர்கள் அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான பரீட்சையில் சித்தியடைய வேண்டும். மின்சாரப் பணியாளர்கள் பதவி உயர்வுகளைப் பெறுவதற்கு இந்தப் பரீட்சைகளில் சித்தியடைவது கட்டாயமாக்கப்படும்.

அதேவேளை புதிதாக அறிமுகப்படுத்தப்படவிருக்கும் மின்சார உபகரணங்களுக்கான தேசிய நியமத்தின் பிரகாரம் 5 அம்பியர், 15 அம்பியர் மின்செருகிகள் மற்றும் மின்குதைகுழிகள் என்பன தடைசெய்யப்படவுள்ளது. அவற்றுக்கு பதிலாக 13 அம்பியர் மின்செருகிகள், மின்குதைகுழிகள் என்பவற்றையே பயன்படுத்த வேண்டும். எதிர்வரும் டிசெம்பர் 31ஆம் திகதிக்குப் பின்னர் உரிய நியமங்களுக்கு பொருந்தாத மின்னுபகரணங்களின் ஏற்றுமதி, இறக்குமதி, விற்பனை என்பன முற்றாகத் தடை செய்யப்படும்.

தற்போது வீடுகளில் பாவனையில் உள்ள 5 அம்பியர், 15 அம்பியர் மின்செருகிகள் மற்றும் மின்குதைகுழிகளின் ஆயுட்காலம் முடியும் வரை அவற்றைப் பயன்படுத்துவதற்குத் தடையில்லை. எனினும் எதிர்வரும் காலங்களில் முறையற்ற மின்னுபகரணப் பயன்பாட்டை தவிர்ப்பதன் மூலம் மின்சார ஆபத்துக்களைத் தவிர்க்க முடியும் எனவும் தெரிவித்தார்.