காணாமல்போனோர் பற்றி அலுவலகத்தின் மீதான விமர்சனங்கள்,  வடக்கில் நடைபெற்ற அமர்வுகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் குறித்த அனுபவங்கள், எதிர்காலச் செயற்பாடுகள், சவால்களை தாண்டி செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான செயற்றிட்டங்கள், போராடும் உறவுகள் குறித்த நிலைப்பாடு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து அதன் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்தார்.

அவர் இது குறித்து மேலும் தெரிவித்தாவது,

கேள்வி:- வடக்கிற்கு சென்று காணாமல்போனோரின் உறவினர்களை நேரடியாகச் சந்தித்திருந்தீர்கள் அந்த அனுபவத்தினைக் குறிப்பிடுங்கள்?

பதில்:- வடக்கு மாகாணத்தில் வவுனியா தவிர்ந்த ஏனைய நான்கு மாவட்டங்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்திருந்தோம். நாம் அந்த மக்களை அழைத்து சாட்சிகளை பெறுவதற்காக அங்கு அமர்வுகளை நடத்தவில்லை. எமது அலுவலகம் செயற்பட ஆரம்பித்ததனை அடுத்து முதற்கட்டமாக அந்த மக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்வதற்காகவே அங்கு சென்றிருந்தோம். 

இதன்போது எமது அலுவலகத்தின் ஊடாக தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிவதற்கு முனைப்புக் காட்டும் ஒரு தரப்பினரையும் அதேநேரம் இந்த அலுவலகம் அவசியமில்லை என்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்யும் தரப்பினரையும் காணமுடிந்தது. 

எமது அலுவலகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் அல்லது எதிர்க் கருத்துக்களை முன்வைப்பவர்கள் கடந்த காலங்களில் ஆணைக்குழுக்கள் மூலம் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ள நிலையில் நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படவில்லை என்ற ஆதங்கம் உள்ளது. அத்துடன் சர்வதேச பொறிமுறையொன்று உருவாக்கப்படும் என்ற கருத்துக்கள் அவர்களிடத்தில் விதைக்கப்பட்டுள்ளதால் அது குறித்த எதிர்பார்ப்பும் காணப்படுகின்றது. 

குறிப்பாக யாழ்ப்பாண அமர்வினை எடுத்துக்கொண்டால் வீரசிங்கம் மண்டபத்தில் அமர்வு நடைபெற்றபோது சொற்ப அளவிலானவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தபோதும் பெரும்பான்மையானவர்கள் அமர்வில் பங்கேற்றுக்கொண்டனர். அமர்வு ஆரம்பித்து சிறிது நேரத்தில் மண்டபத்திற்குள் பிரவேசித்து கோசங்களை எழுப்பியதோடு அமர்வுகளில் பங்கேற்றவர்களை வெளியேறுமாறும் கோரினர். இதனால் இரு தரப்பினரிடையேயும் வாதவிவாதங்கள் நடைபெற்றதை நாம் நேரடியாகவே அவதானித்தோம். 

கேள்வி:- காணமல்போனோர் விடயத்தில் கடந்த கால அனுபத்தினால் ஏற்பட்ட அவநம்பிக்கையின் வெளிப்பாடே எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா?

பதில்:- ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின் ஆதங்க உணர்வினை புரிந்துகொள்கின்றேன். உறவுகள் இல்லாமையால் அவர்கள் அடைந்துள்ள கவலைகள் எனக்கு விளங்குகின்றது. அத்தகையவர்கள் எமது அலுவலகத்தின் மீது கொண்டிருக்கும் அவநம்பிக்கையின் காரணமாக முன்னெடுக்கும் போரட்டத்தினை நான் மதிக்கின்றேன். அதற்கு அவர்களுக்கு பூரண உரித்தும் உள்ளது. 

ஆனால், அந்தப்போராட்டம் அமர்வில் பங்கேற்க வருகைதரும் ஏனையவர்களுக்கு இடையூறாக அமையக்கூடாது. அத்துடன் இவ்வாறு ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் சர்வதேச பொறிமுறை ஊடாக இந்த விடயத்திற்கு தீர்வு கிடைக்கும் என்று கருதுவார்களாயின் அதனை மீளவும் சிந்திக்க வேண்டும். 

சர்வதேச பொறிமுறையொன்று உருவாக்கப்பட்டு ஆயிரக்கணக்கில் காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்து கண்டறிந்து விட முடியுமா என்பது தொடர்பில் கேள்விகள் உள்ளன.சர்வதேச பொறிமுறை ஊடாக இந்த விடயத்திற்கு தீர்வு கிடைக்கும் என்ற கருத்தை இம்மக்களிடத்தில் முன்வைப்பவர்கள் இந்த மக்களின் உண்மையான நலனை மையப்படுத்தியா செய்கின்றார்கள் என்ற கேள்வி எனக்குள்ளது. 

நாம் சொல்லும் விடயங்கள் அனைத்தின் மீது நம்பிக்கைகொள்ளாது விட்டாலும், அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொண்டிருக்காது விட்டாலும் அலுவலகத்தின் குறைபாடுகள்,  அது பற்றிய விமர்சனங்கள் போன்றவற்றை தெரிவிப்பதற்காகவாவது எமது அமர்வுகளில் பங்கேற்குமாறு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் உறவுகளிடத்தில் கேட்டுக்கொள்கின்றேன். 

அவ்வாறு பங்கேற்பதானது இந்த அலுவலகம் வினைத்திறனாக செயற்படுவதற்கு வழிவகுப்பதாக இருக்கும். அதனை விடுத்து பிரிவுகளாகி ஆர்ப்பாட்டங்களை  மேற்கொள்வதனால் ஆர்ப்பாட்டங்கள் கூட வெற்றியளிக்காது போய்விடும். 

கேள்வி:- காணமல்போனோரின் உறவினர்கள் வீதியோரத்தில் ஐந்நூறுக்கும் அதிகமான நாட்களாக தொடர்போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் முதியவர்கள் மரணமடைந்தும் உள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு நீங்கள் என்ன கூறவிரும்புகின்றீர்கள்? 

பதில்:- அடுத்த மூன்று மாதங்களுக்குள் அவர்களின் பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படும் என்று பொய்யான வாக்குறுதியை எமக்கு வழங்க முடியாது. குறுகிய காலத்தில் இப்பிரச்சினைக்கான தீர்வினை வழங்க முடியாது என்பதை அனைவரும் அறிவார்கள். மிகவும் சிக்கலான இந்த விடயத்தினை தீர்ப்பதற்காகவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30.1தீர்மானத்தின் பிரகாரம் நிரந்தரமான அலுவலகம் நிறுவப்பட்டுள்ளது. 

ஆகவே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் உறவுகளுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பிலான அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்கான ஒரு பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும். அதற்காகவாவது அவர்கள் எமக்கு ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும். அச்செயற்பாடு அவர்களின் போராட்டம் வெற்றிபெறுவதற்கு முதற்படியாகவும் அமையலாம்.

கேள்வி:- கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை, காணமல்போனோர் தொடர்பான பரணகம ஆணைக்குழு அறிக்கை ஆகியன காணப்படுகின்ற நிலையில் மீண்டும் அமர்வுகள் நடத்தப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதா?

பதில்:- மீண்டும் அமர்வுகளை நடத்தி வேதனைக்குள்ளானவர்களை மேலும் வேதனைக்குள்ளாக்கும் வகையில் விசாரணைகளை மேற்கொள்வது எமது நோக்கமல்ல. ஆகவே கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை மற்றும் பரணகம ஆணைக்குழு அறிக்கை ஆகியவற்றினை மீள்பரிசீலனை செய்யவுள்ளோம். சாட்சிகளின் பதிவுகள் அடங்கிய  இந்த அறிக்கைகளின் பிரதிகளைப் பெறுவதற்கான அனுமதிகளையும் பெற்றுள்ளோம். 

கேள்வி:- மேற்படி இரு ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை எவ்வாறு பயன்படுத்தவுள்ளீர்கள் என்பதோடு அவற்றில் குறைபாடுகள் காணப்படுவதாக கூறப்படுகின்றதே?

பதில்:- இந்த அறிக்கைகளில் உள்ள சாட்சியங்களின் பதிவுகளை பயன்படுத்தவுள்ளோம். எனினும் இந்த அறிக்கைகளை இறுதியானவையாக கருதப்போவில்லை. அவற்றை விசாரணைக்கான வளங்களாக பயன்படுத்தவுள்ளோம். சாட்சியங்கள் தவறாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளமை, திரிவுபடுத்தப்பட்டுள்ளமை, சாட்சியங்கள் அச்சம் காரணமாக விபரங்களை முழுமையாக குறிப்பிடாமை போன்ற பல குறைபாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆகவே அதனையும் கவனத்தில் கொண்டு தான் செயற்படுவோம். 

கேள்வி:- அலுவலகம் நிரந்தரமாக காணப்படுகின்ற அதேநேரம் தங்கள் தலைமையிலான குழுவினருக்கான பதவிக்காலம் வரையறுக்கப்பட்டுள்ள நிலையில்  அக்காலப்பகுதியில் எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளீர்கள்?

பதில்:- எமது பதவிக்காலம் மூன்றாண்டுகளாக இருக்கின்றன. அக்காலப்பகுதியில்  காணமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பிலான வினாக்களுக்கு பதில்களை தேடவுள்ளோம். தற்போது கிராமாசேவகர்கள் ஊடாக பெற்றுக்கொண்ட தகவல்களின் பிரகாரம் 13ஆயிரம் வரையிலான முறைப்பாடுகள் காணப்படுகின்றன. ஏற்கெனவே ஆணைக்குழுக்களின் அறிக்கைகளில் உள்ள சாட்சிகளை மீளாய்வுக்கு உட்படுத்தி அவற்றில் தெளிவுபடுத்தல்களோ தவறான தகல்களோ அல்லது மேலும் தகவல்களோ அவசியமாகுமாயின் அவற்றை  பெற்றுக்கொள்ளவுள்ளோம். 

காணாமலாக்கப்பட்டவார்களில் மோதல்களின் போது காணமல்போனவர்கள்இ பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்கள், கைதுகளின் பின்னர் சரணடைந்து காணாமலாக்கப்பட்டவர்கள் என வெவ்வேறு தரப்பினர் உள்ளனர். ஆகவே அவர்களுக்கு என்ன நிகழ்ந்தது என்பதை அறிவதற்கு விரிவான தேடலுடன் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளோம். அதற்கு விஞ்ஞான தொழில்நுட்பத்துடனான உதவியும் அவசிமாகின்றது. 

இத்தகைய பிரதான விடயத்தினைத் தாண்டி தமது உறவுகள் காணாமல்போயுள்ளமையால் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள மன உளைச்சலைப் போக்குவதற்கான பரிந்துரைகளைச் செய்ய முடியும். அத்துடன் இக்குடும்பங்கள் தமக்கு எந்த இழப்பீடும் வேண்டாம் தமது உறவுகளே வேண்டும் என்று அழுத்தமாக கூறியுள்ளார். இழப்பீடுகளை வழங்கிய இந்தப்பிரச்சினைக்கு தீர்வினை அளிக்க முடியாது என்பதை நாம் உணர்ந்திருக்கின்றோம். 

இருந்தபோதும் அவர்களின் கணவரோ, புதல்வரோ, சகோதரரோ காணாமலாக்கப்பட்டமையால் வாழ்க்கையை நகர்த்திச் செல்வதில் பொருளாதார ரீதியாக ஏற்பட்டுள்ள கடின நிலைமையையும் சுட்டிக்காட்டியுள்ளதால் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் சமகாலத்தில் சில உதவிகளையும் வழங்குதற்கு பரிந்துரைக்க முடியும். 

கேள்வி:- கடந்த காலத்தில் மரணச்சான்றிதழ் அல்லது காணாமல்போனோருக்கான சான்றிதழ் வழங்குவது குறித்து பேசப்பட்ட நிலையில் தாங்களும் அவ்வாறான பரிந்துரையொன்றை முன்வைப்பீர்களா?

பதில்:- உறவுகள் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ காணாமல்போனோருக்கான சான்றிதழ் வழங்க முடியும். வடக்கிலும் சரி தெற்கிலும் சரி இவ்வாறான கடதாசி சான்றிதழ்கள் வேண்டாம் என்று கூறுவதோடு உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதையே கோருகின்றார்கள். 

கேள்வி:- இராணுவத்தினர்,  விடுதலைப்புலிகள் மற்றும் துணைக்குழுக்கள் என பலதரப்பட்டவர்கள் மீது குற்றச்சாட்டுக்களை சாட்சி வழங்கியவர்கள் முன்வைத்துள்ள நிலையில் அவர்கள் மீதான விசாரணைகளை முன்னெடுக்க முடியுமா?

பதில்:- குழுவினராகவோ அல்லது தனிநபராகவோ எத்தகையவராக இருந்தாலும் அவர்கள் மீது விசாரணை செய்ய முடியும் என்பதே எமது அலுவலகத்தின் அதிகாரமாகவுள்ளது. ஆனால் அனைத்தையும் உடனடியாகச் செய்ய முடியாது. கிரமமான செயற்றிட்டத்தின் ஊடாக நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. இதன்காரணத்தினாலேயே நிரந்தர அலுவலகம் நிறுவப்பட்டுள்ளது. 

கேள்வி:- படையினர் சம்பந்தமாக விசாரணை மேற்கொள்ளவது தொடர்பாக பேசும் போதே கடும் எதிர்ப்புக்கள் எழுகின்ற நிலையில் அவற்றை கடந்து விசாரணைகள் சாத்தியமாகுமா?

பதில்:- பக்கச்சார்பற்ற நிலையில் எமது செயற்பாடுகளை முன்னெடுப்பதே நிலைப்பாடாகும். படையினருக்கு எதிராக சாட்சியங்கள் காணப்பட்டால் அவற்றை தவிர்த்து விட்டு அமைதியாக இருக்கப்போவதில்லை. 

கேள்வி:- இலங்கைக்கு வெளியே குறிப்பாக இந்திய இராணுவத்தினர் மீதும் குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்ற நிலையில் அவை குறித்தும் விசாரணை மேற்கொள்வதற்கு வாய்ப்புக்கள் உள்ளனவா?

பதில்:- இலங்கையினுள் காணாமல்போனவர்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் சம்பந்தமாக எவரிடமும் விசாரணை செய்யமுடியும் என அதிகாரம் உள்ளது. அதன் அடிப்படையில் செயற்படும்போது இந்திய இராணுவம் தொடர்பில் பிரயோக ரீதியாக எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பது குறித்து பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது. 

கேள்வி:- படைமுகாம்களுக்குள் நேரடியாகச் சென்று விசாரணைகளை அல்லது ஆய்வுகளை செய்வதற்கு அதிகாரம் உள்ளதா?

பதில்:- அவசியம் ஏற்படுகின்றபோது அத்கைய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான அதிகாரம் எமக்கு உள்ளது. மிகவும் சவால் மிக்க செயற்பாடாகும். 

கேள்வி:- விசேடமாக திருகோணமலை கடற்படைமுகாமில் காணப்பட்ட இரகசிய முகாம் தொடர்பாக பல்வேறுபட்ட தகவல்கள் உள்ள நிலையில் அதுதொடர்பில் கவனம் செலுத்துவீர்களா?

பதில்:- நாம் விசாரணையை இன்னமும் ஆரம்பிக்கவில்லை. தற்போது அலுவலகத்தினை தயார்ப்படுத்தும் நடவடிக்கைகளையே எடுத்து வருகின்றோம். விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்ற தருணத்தில் அது தொடர்பிலும் நிச்சயம் கவனத்தில் கொள்வோம். 

கேள்வி:- மன்னார் மனித புதைகுழி உட்பட வடக்கில் காணப்படுவதாக கூறப்படும் மனிதப் புதைகுழிகள் சம்பந்தமாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுமா? 

பதில்:- மன்னார் மனித புதைகுழியை நாம் நேரயாக பார்வையிட்டுள்ளதோடு அது தொடர்பில் நீதிமன்றசட்ட வைத்திய அதிகாரியுடனும் கலந்துரையாடி வருகின்றோம். இதுபோன்ற விடயங்கள் முன்வைக்கப்படுமிடத்து அவற்றில் விசேட கவனங்களை எடுப்பதற்கு பின் நிற்கப்பேவதில்லை. 

கேள்வி:- இவற்றை விடவும் இறுதி யுத்தத்தின் போது படையினரிடம் நேரடியாக கையளிக்கப்பட்டு அல்லது சரணடைந்து போனவர்கள் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுப்பீர்களா?

பதில்:- அவை தொடர்பான சாட்சியங்களும் காணப்படுகின்றன. ஆகவே அவ்விடயத்திற்கு நாம் முன்னுரிமை வழங்கி செயற்பட முயற்சிப்போம். 

கேள்வி:- தாங்கள் முன்னெடுக்கும் விசாரணையின் அடிப்படையில் குறித்த குழுவினரோ அல்லது நபரோ அடையாளம் காணப்படும் பட்சத்தில் எத்தகைய நடவடிக்கைகளை எடுப்பீர்கள்? 

பதில்:- எமது அலுவலகத்திற்கு தண்டனை வழங்குவதற்கான அதிகாரம் இல்லை. காணாமல்போன நபருக்கோ அல்லது குழுவுக்கோ என்ன நடந்தது என்பதை மட்டுமே அறிந்து கொள்ள முடியும். அச்சமயத்தில் குற்றமிழைக்கப்பட்டுள்ளது என்பதும் அதனுடன் தொடர்புபட்டவர்கள் என்பதும் அடையாளம் காணப்படும் இடத்து குற்றவியல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் கட்டமைப்புக்களின் கவனத்திற்கு கொண்டு வந்து பரிந்துரைகளைச் செய்வதற்கே எமக்கு அதிகாரம் உள்ளது. 

கேள்வி:- காணமல்போனோர் பற்றி பிரந்திய அலுவலகங்கள் எவ்வாறு எப்போது செயற்படவுள்ளன? 

பதில்:- வடக்கில் ஐந்து அலுவலகங்களும் கிழக்கில் மூன்று அலுவலகங்களும் நாட்டின் ஏனைய பகுதிகளில் நான்கு அலுவலகங்களும் அமைக்கப்படவுள்ளன. அதன் பிரகாரம் வடக்கில் முதலாவது அலுவலகம் ஒருமாத காலத்தினுள் ஆரம்பிக்கப்படவுள்ளது. இவ்வாறு ஆரம்பிக்கப்படும் அலுவலகங்களின் ஊடாக மேலதிக விசாரணைகள், குடும்பங்களுக்கு உதவுதல், சாட்சியாளர்களுக்கு உதவுதல் மற்றும் அவர்களின் பாதுகாப்பு போன்ற செயற்பாடுகளே முன்னெடுக்கப்படவுள்ளன. அதற்கான அலுவலர்களும் நியமிக்கப்படவுள்ளனர். 

கேள்வி:- காணாமல்போனார் பற்றி அலுவலகம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட வெளிநாட்டுகளின் அழுத்தங்கள் காரணமாக அமைக்கப்பட்டதென்று தென்னிலங்கையிலும் காலம் கடத்துவதற்காக அமைக்கப்பட்டதென்று வடக்கிலும் கூறப்படுவது பற்றி? 

பதில்;- ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட வெளிநாட்டுத் தரப்புக்களை மகிழ்விப்பதற்காக இத்தகைய அலுவலத்தினை அமைக்க வேண்டிய அவசியமில்லை. இந்த நாட்டில் கடந்த நாற்பது வருடங்களாக காணமல்போன சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அதனடிப்படையில் இந்த நாட்டின் எதிர்காலத்திற்கு இத்தகைய அலுவலகம் அவசியமாகின்றது. எது எவ்வாறாயினும் நான் உள்ளிட்ட ஏழு பிரதிநிதிகளும் யாரையும் ஏமாற்றவேண்டும் எண்ணப்பட்டிலோ அல்லது எவரையும் திருப்பதிப்படுத்தப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலோ இந்தப் பணியை பொறுப்பேற்கவில்லை. 

கேள்வி:- ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் காணாமல்போனவர்களின் உறவினர்களை சந்திக்கின்ற போது வாக்குறுதிகளை வழங்கினாலும் காணாமல்போனவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை, இராணுவத்தினை விசாரணைக்கு உட்படுத்த இடமளிக்க மாட்டோம் என்று மறுபக்கத்தில் பகிரங்க கருத்துக்களை முன்வைக்கின்றார்களே? 

பதில்:- அரசாங்கம் என்ற வகையில் சில விடயங்கள் சுயாதீனமாக செய்ய வேண்டிவைகளாக உள்ளன. அதற்காகவே சுயாதீன ஆணைக்குழக்கள் நாட்டில் உள்ளன. அந்த வகையில் காணாமல்போனவர்கள் விவகார அலுலகமும் சுயாதீன தன்மைகொண்ட ஆணைக்குழுவிற்கு நிகரானதாக அமைக்கப்பட்டுள்ளது. ஆகவே அதன் சுயாதீன செயற்பாடுகளுக்கும் இமளிக்க வேண்டியது கடமையாகின்றது. 

கேள்வி:- உங்களது செயற்பாடுகளை முன்னெடுக்கின்றபோது அரசியல் அழுத்தங்கள் ஏற்படும் பட்சத்தில் அச்சவாலுக்கு முகங்கொடுத்து முன்நகரமுடியுமா?

பதில்:- தற்போது வரையில் நாம் அரசியல் அழுத்தங்களுக்கு இலக்காகவில்லை. நான் உட்பட எமது அலுவலகத்தின் ஏழு பிரதிநிதிகளும் அநாவசியமான அரசியல் தலையீடுகளுக்கு அடிபணிவதில்லை என்ற ஏகோபித்த கருத்தினைக் கொண்டிருக்கின்றோம். 

ஏதோவொரு கட்டத்தில் அவ்வாறான அழுத்தங்களுக்கு இலக்காகும் பட்சத்தில் அதற்கு எதிரான நடவடிக்கைளை எடுப்போம். குறிப்பாக நான் இந்தப் பதவிக்காக நியனம் பெற்ற தினமன்று எமது செயற்பாடுகளுக்கான இடைவெளியையும் கால அவகாசத்தினையும் வழங்கி சுயாதீன செயற்பாட்டுக்கு இடமளிக்குமாறு கோரியுள்ளேன்.

கேள்வி:- காணமல்போனோர் பற்றி அலுவலகத்தின் செயற்பாட்டு ரீதியான வெற்றிக்கு அவசியம் எதுவெனக் கருதுகின்றீர்கள்?

பதில்:- அரசாங்கத்தின் அரசியல் துணிகமும் விருப்புமே அலுவலகத்தின் செயற்பாட்டு ரீதியான வெற்றிக்கு வழிவகுக்கும். அது இல்லாது போனால் அலுவலகத்தினால் வெற்றிகரமாக செயற்பட முடியாது.

(ஆர்.ராம்)