பாகிஸ்தான் பாராளுமன்றத் தேர்தல் நளை நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பாதுகாப்பு கடமைக்காக சுமார் 3 இலட்சத்து 70 ஆயிரம் இராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டிருப்பதாக அந் நாட்டு செய்திகளின் வாயிலாக தெரியவந்துள்ளது.

 

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பதவி நீக்கப்பட்டார். தற்போது இடைக்கால அரசு பொறுப்பில் உள்ளது. இந்நிலையிலேயே பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்தத் தேர்தலில் ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - நவாஸ் (பி.எம்.எல்.என்) கட்சிக்கும், முன்னாள் கிரிக்கெட் வீரரும் அரசியல் வாதியுமான இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெரிக், இன்சாப் (பி.டி.ஐ) கட்சிக்கும் இடையில் போட்டி நிலவுகிறது. எனினும், பிலாவல் புட்டோ சர்தாரி தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சியும், அதன் கூட்டணி கட்சியான முத்தாஹிதா மஜ்லிஸ், அமால் கட்சியும் கணிசமானத் தொகுதிகளைக் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தேர்தலில் 10.5 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் பாராளுமன்ற தொகுதிக்கும், மாகாண தொகுதிக்கும் என 2 வாக்குகளைப் பதிவு செய்வார்கள். பாகிஸ்தானில், சிந்து, பலுசிஸ்தான், பஞ்சாப், கைபர் பக்துன்கவா ஆகிய 4 மாகாணங்களுக்குமான வாக்குப் பதிவு நாளை காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை இடம்பெறவுள்ளது.

பாகிஸ்தான் பாராளுமன்றத்துக்கு 272 உறுப்பினர்கள் மக்களினாலும் 70 உறுப்பினர்கள் நியமனங்களிலும் அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். எனவே 272 இடங்களில், 137 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் கட்சி ஆட்சி அமைக்க தகுதி பெறும். இந்நிலையில், ஆளும் பி.எம்.எல்-என் கட்சியினர் பலர் இம்ரான் கட்சிக்கு தாவியுள்ளனர். பலர் கட்சியிலிருந்து விலகி சுயேச்சையாகப் போட்டியிடுகின்றனர்.

இதன் பின்னணியில் பாகிஸ் தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யும்  (Inter Services Intelligence -ISI) இராணுவம் இருப்பதாக நவாஸ் ஷெரீப் கட்சியின் நிர்வாகிகள் குற்றம்சுமத்தியுள்ளனர். இதன் காரணமாக ஜனநாயக ரீதியான தேர்தல் இடம்பெறுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இந் நிலையில் தேர்தலை அமைதியாகவும் ஜனநாயக ரீதியாகவும் நடத்துவதற்காக  மூன்று இலட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களை தேர்தல் பாதுகாப்பு கடமைக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.