(எம்.சி.நஜிமுதீன்)

ஜனநாயகத்துக்கு எதிரான ஆட்சியை கவிழ்க்க வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது. எனவே நாட்டிலுள்ள சகல தரப்பினரதும் பங்களிப்புடன் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஐந்தாம் திகதி கொழும்பில் பாரிய பேரணியென்றை நடத்தவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கத்திற்கு எதிராக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி கொழும்பில் பாரிய பேரணி ஒன்றை நடத்துவதற்கு கூட்டு எதிர்க்கட்சியின் இளைஞர் அணி ஏற்கனவே தீர்மானித்திருந்தது. எனினும் நேற்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் குறித்த பேரணியை செப்டெம்பர் மாதம் ஐந்தாம் திகதி நடத்த தீர்மானம் எட்டப்பட்டது.

ஏனெனில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதியும் க.பொ.த. உயர்தரப் பரீட்சை நடைபெறும் தினமாக உள்ளது. செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி வரை பரீட்சை தொடரவுள்ளது. அதனாலேயே அரசாங்கத்திற்கு எதிரான பேரணியை செப்டெம்பர் மாதம் ஐந்தாம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

ஆகவே செப்டெம்பர் மாதம் ஐந்தாம் திகதி நடைபெறவுள்ள குறித்த பேரணியில் நாடு தழுவிய ரீதியிலுள்ள தொழிற்சங்கங்கள், சிவில் சமூகப் பிரிதிநிதிகள் என ஏராளமானோர் கலந்துகொள்ளவுள்ளனர்.