மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை கிருமிச்சை சந்தி பகுதியில் இராணுவத்திற்கு முகாம் அமைப்பதற்காக காணிகளை வழங்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டு.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மட்டு.மாவட்ட செயலாளர் மா.உதயகுமாருக்கு நேற்று அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இராணுவத்தினருக்கு இங்கு காணி வழங்க முடியாது. ஏற்கனவே பல நூற்றுக்கணக்கான காணிகளில் இராணுவ முகாம்கள் அமைந்துள்ளது. எனவே இது குறித்து ஆராய மாவட்ட அபிவிருத்தி குழுவின் நிகழ்ச்சி நிரலில் இவ் விடயத்தை இணைத்துக் கொள்ளவும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இக் கடிதத்தின் பிரதிகள் கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித போகொல்லாகம, கிழக்கு மாகாண காணி ஆணையாளர் டி.டி.அனுர தர்மதாஸ, பிரதேச செயலாளர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.