(இராஜதுரை ஹஷான்)

தனிமனித ஜனநாயகம், ஊடக சுதந்திரம் ஆகியவற்றை முறையாக பயன்படுத்திக் கொண்டு சிறந்த அரசியல் கலாசாரத்தையும் ஆட்சிமுறைமையினையும் தோற்றுவிக்க வழிவகுக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

வெளிநாட்டு தூதுவர்கள், அமைச்சர்கள், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரின் பங்குபற்றலுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் களுகங்கை நீர்தேக்கத்திற்கு நீர் நிரப்பும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 

தேசிய அரசாங்கத்தில் அனைத்து  ஜனநாயகங்களும் உறுதிப்படுத்தப்பட்டு சுயாதீனமாக செயற்படக் கூடிய நிலைமை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. ஊடகங்கள்   மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கும் கருவியாக செயற்பட வேண்டும் என்ற காரணத்தினால் ஊடக சுதந்திரம்  பலப்படுத்தப்பட்டது. ஆனால் இன்று எதிர்பார்க்கப்பட்ட இலக்கினை அடைய முடியாத நிலைமை உருவாகியுள்ளது.

தோற்றுவிக்கப்பட்ட ஜனநாயகம்  சிலரது முறையற்ற செயற்பாட்டின் காரணமாக  இல்லாதொழிந்து  கண்ணீர் சிந்த கூடிய நிலைமை    உருவாகும் சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றது. ஆகவே ஊடகத்தின் சுதந்திரத்தினை முறையாக பயன்படுத்தி ஏற்படக் கூடிய ஆபத்துக்களை   ஊடகங்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

மொரஹாகந்த  களுகங்கை அபிவிருத்தி திட்டங்கள் நாட்டின் எதிர்கால   விவசாய பொருளாதார மேம்பாட்டிற்கு பெரிதும் உதவும். கடந்த 2008 ஆம் ஆண்டு தொடக்கம்  2014 ஆம் ஆண்டு வரை இழுத்தடிக்கப்பட்ட அபிவிருத்தி திட்டம் தேசிய அரசாங்கத்தின்  குறுகிய 03 வருட கால நிர்வாகத்தில் முழுமையடைந்துள்ளமை பாரிய வெற்றியாகும். 

தேசிய  அரசாங்கம் ஆட்சி பொறுப்பினை ஏற்று என்ன செய்தது என்று சிலர் குறுகிய வட்டத்திற்குள் இருந்து கொண்டு  குற்றம்  சாட்டுகின்றனர். கடந்த அரசாங்கம் செய்த எதனையும் தேசிய அரசாங்கம் செய்யவில்லை என்பதை மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். நிலையான அபிவிருத்தி மற்றும் ஜனநாயக ஒருமைப்பாடு போன்ற விடயங்களை தேசிய  அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது என்ற விடயமே பாரிய வெற்றியாக காணப்படுகின்றது என்றார்.