இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் பாடசாலை நிறைவடைந்து பஸ்ஸில் வீடு திரும்பிய 15 வயது சிறுமியை பஸ் நடத்துனர் உள்ளிட்ட 4 பேர் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மத்திய பிரதேச தேவாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியொருவர் கடந்த 16 ஆம் திகதி பாடசாலை சென்று வீடு திரும்பவில்லை.

இதனையடுத்து சிறுமியை அவளது பெற்றோர் எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் கடந்த 17 ஆம் திகதி பொலிஸில் இது தொடர்பில் முறைப்பாடு தெரிவித்தனர்.

 

இதையடுத்து அந்த சிறுமியை கடந்த சனிக்கிழமையன்று அவரது வீட்டருகே சந்தல்பூர் என்ற வீதியில் வைத்து பொலிஸார் கண்டுபிடித்தனர். 

இதன்போது குறித்த சிறுமியிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் பல தாகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த சம்பவதினமன்று சிறுமி பாடசாலை விட்டு  வெளியே வந்து ஒரு பஸ்ஸில் ஏறியுள்ளார். அப்போது அந்த பஸ்ஸின் நடத்துனர் அந்த சிறுமியை பலாத்காரம் செய்துவிட்டு பஸ்ஸை விட்டு இறக்கியுள்ளார். இதையடுத்து அங்கு தனியாக நின்றிருந்த சிறுமியை மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் வீட்டில் விட்டு விடுவதாக கூறி அழைத்து சென்றனர்.

ஆனால் சிறுமியை வீட்டில் விடாமல் அவர்களது கிராமத்திற்கு அழைத்துச் சென்று ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து இருவரும் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர். இதையடுத்து தனது வீடு நோக்கி சென்று கொண்டிருந்த சிறுமியை மோட்டார் சைக்கிளில் சென்ற இன்னொருவர் வீட்டில் விடுவதாக கூறியுள்ளார்.

இதையும் நம்பி ஏறிய சிறுமியை அந்த நபரும் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். இதையடுத்து பொலிஸார் குறித்த 4 பேரையும் கைது செய்துள்ள நிலையில் சிறுமியை வைத்திய பரிசோதனைக்காக அனுமதித்துள்ளனர்.