இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலகவிற்கு சர்வதேச போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இரு வெளிநாட்டுப்பெண்கள் விமானநிலையத்தில் செய்த முறைப்பாட்டில் தனுஷ்க குணதிலகவின் பெயரும் உள்ளடக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவருக்கான தடை விதிக்கப்பட்டுள்ளது.

தனுஷ்க குணதிலக ஒழுக்க விதி மீறல் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய விசாரணைகள் நிறைவடையும் வரை அனைத்து வகையான சர்வதேச போட்டிகளிலும் விளையாட அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிால 2 ஆவது டெஸ்ட் போட்டி நிறைவடைந்ததும், இந்த தடை அமுலுக்கு வருமெனவும், இன்றைய தினம் தென்னாபிரிக்க அணியுடனான நான்காம் நாள் ஆட்டத்திலும் அவர் பங்குகொள்ள மாட்டாரெனவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

வீரர்களுக்கான நடத்தைக் கோவையை மீறியமை, தங்கியிருந்த விடுதி அறைக்கு இரவு 10 மணிக்குப்பின்னர் சென்றமை போன்ற குற்றச்சாட்டுக்கள் தனுஷ்க குணதிலக மீது சுமத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, இரு வெளிநாட்டுப் பெண்கள் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தனுஷ்க குணதிலக்க தென்னாபிரிக்க அணிக்கு எதிராக இடம்பெற்றுவரும் டெஸ்ட் போட்டியில் தொடர்ச்சியாக இரு  அரைச்சதங்களை அடித்து சிறப்பான முறையில் துடுப்பெடுத்தாடிவருகின்ற நிலையில் இவ்வாறான நிலைய இலங்கை அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.