தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்கள் காலத்திற்கு உரிய மாற்றங்களுடன் நடைபெறவேண்டும் என வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா  நிரோஷ் தெரிவித்தார்.

நீர்வேலியில் இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினரின் ஏற்பாட்டில் மாட்டுவண்டிச் சவாரிப்போட்டிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றன. இப் போட்டிகளுக்கு பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு போட்டிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தமிழ் மக்களின் பாரம்பரிய விளையாட்டுக்கள் வழக்கொழிந்து போகின்றன. இது வேதனை தருகின்ற விடயம். நீர்வேலியில் வண்டில் சவாரியினை சிறந்த முறையில் நடத்தக்கூடிய திடல் உள்ளது. எனினும் கடந்த சில ஆண்டுகளாக இப் போட்டிகள் நடைபெறுவதில் பல்வேறு இடையூறுகள் நிலவின. 

இதனால் போட்டிகள் தடைப்பட்டும் இருந்தன. இதன் பின்னர் மாட்டுவண்டிச் சாவாரிப்போட்டிகளை நடத்த வேண்டும் என்ற ஆர்வத்தில் வண்டில் சவாரிச் சங்கத்தினர் என்னுடன் பேசினர். எமது பக்க நடவடிக்கையாக ஆராய்ந்து பார்த்த போது சவாரியின் போதுஇ காளைகளுக்கு துன்புறுத்தல்கள் பிரயோகிக்கப்படும் குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு பொலிஸ் நிலையத்திற்கு விலங்குகள் ஆர்வலர்களால் முன்வைக்கப்படும் முறைப்பாடுகளே தொடர்ந்து சவாரிப்போட்டிகளை நடத்துவதற்குத் தடையாக அமைந்தன என்பதை புரிந்துகொண்டேன். 

இந் நிலையில் நாம் சகலருடனும் பேச்சுவார்த்தை நடத்தி எதிர்காலத்தில் விலங்குகள் சித்திரவதை செய்யப்படாது நல்ல பல மாற்றங்களுடன் எமது பாரம்பரிய விளையாட்டினை மேற்கொள்ள ஆமோதிப்பினைப் பெற்றுக்கொண்டோம். நான் கூட ஓர் மனித உரிமை செயற்பாட்டாளனாக இருந்தே தவிசாளராக பொறுப்பேற்றிருக்கின்றேன். ஆகவே நாங்கள் உயிர்களின் உரிமைகளில் வலுவான ஆர்வத்தில் இருக்கின்றோம்.

எமது சமயங்களிலும் கூட விலங்குகளைக் கடவுளாக மதிக்கின்றார்கள். வணங்குகின்றார்கள். இவ்வாறிருக்க நாம் எந்த உயிரினத்தினையும் வதைக்கவேண்டியவர்கள் இல்லை. எனவே நல்ல மாற்றங்களை உள்வாங்கிக்கொண்டு நாங்கள் இந்தத் திடலில் வெற்றிகரமாக இரண்டாவது தடவையாக தடைகள் இன்றி சவாரிப்போட்டிகளை நடத்துகின்றோம் என்பதை எண்ணி நாம் பெருமையடையவேண்டும். 

எதிர்காலத்தில் எமது பாரம்பரிய விளையாட்டுகளை முன்கொண்டு செல்லும் முகமாக பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளுக்கான ஒழுக்கக் கோவை ஒன்றை நாம் தயாரிக்கவேண்டும். பாரம்பரிய விளையாட்டுக்களில் நிபுணத்துவம் உடையவர்களைக்கொண்டு இதனை நாம் வகுக்க வேண்டும். 

அதற்காக சகலரும் ஒத்துழைக்க வேண்டும். வலி கிழக்கினை கட்டியெழுப்பும் பொறுப்புக்களிடையே நாம் இது பற்றியும் கவனம் செலுத்துவது இன்றியமையாதது. எமது பாரம்பரியம், பண்பாடு, வரலாறு, தொன்மை இழந்துவிட முடியாதது. எனவே எல்லோரும் கைகோர்த்து சிறந்த மாற்றத்தினை ஏற்படுத்துவோம். என அவர மேலும் தெரிவித்தார்.