இலங்கையானது வெறுமனே ஓர் அயல் நாடாக அன்றி தெற்காசியா மற்றும் இந்து சமுத்திரக் குடும்பத்தில் மிகவும் விசேடமான மற்றும் நம்பகரமான ஒரு பங்காளர் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்திய அரசின் நிதியுதவியுடன் வடக்கு மாகாணத்துக்கு 1990 ‘சுவசெரிய’ இலவச அம்பியூலன்ஸ் சேவையை நாடு முழுவதும் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று மாலை யாழ்ப்பாணம் மாநகர சபை மைதானத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வின் போதே இந்திய பிரதமர் நரேந்திர மோடி புதுடில்லியிலிருந்து நேரடிக் காணொளி அழைப்பினூடாக இந்த அறிவிப்பை விடுத்தார்.

குறித்த காணொளி அழைப்பில் இந்தியப் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கடந்த வருடம் இலங்கைக்கு நான் விஜயம் மேற்கொண்டிருந்த வேளையில், இலங்கை முழுவதும் நோயாளர் அம்பியூலன்ஸ் சேவையை விரிவுபடுத்துவதற்கு நான் கொடுத்த வாக்குறுதி தற்போது நிறைவேற்றப்பட்டமை குறித்து மகிழ்ச்சியடைகின்றேன்.

இந்தியா மற்றும் இலங்கைக்கிடையிலான பங்குடமை அபிவிருத்தியில் இந்த நிகழ்வு மற்றுமொரு மாபெரும் சாதனையை இதனை நான் கருதுகின்றேன். இலங்கையானது வெறுமனே ஓர் அயல் நாடாக அன்றி தெற்காசியா மற்றும் இந்திய சமுத்திரக் குடும்பத்தில் மிகவும் விசேடமான மற்றும் நம்பகரமான ஒரு பங்காளர் என்பதையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

கடந்த காலத்தின் கண்ணீரைத் துடைப்பதிலும் மற்றும் ஒரு பிரகாசமான எதிர்காலத்திற்கு அழைத்துச் செல்வதிலும் இலங்கையுடன் இணைந்து பணியாற்றுவதில் இந்தியா மகிழ்ச்சி அடைகின்றது. இந்தச் சேவையின் விரிவாக்கத்துடன் உள்ளூர்த் திறன்கள் மற்றும் இலங்கையில் உள்ளுர் வேலைவாய்ப்புகள் என்பன ஓர் ஊக்குவிப்பையும் பெறும்.

மேலும் நல்லது மற்றும் கெட்டது ஆகிய இரு சந்தர்ப்பங்களிலும் இலங்கைக்கு முதலில் துணையா இந்தியா இருந்ததுடன் அவ்வாறே என்றும் தொடர்ந்தும் இருக்கும். இலங்கைப் பிரஜைகள் அனைவரினதும் அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் முயற்சிகளையும் பாராட்டுகின்றேன் என்றும் அவர் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவின் இந்த உதவிக்கு இந்திய அரசாங்கத்துக்கு நன்றி தெரிவத்ததுதடன், இந்தியா - இலங்கை இரு தரப்பு உறவில் இதுவொரு முக்கியமான மைல்கல் எனவும் குறிப்பிட்டார்.

பின்னர் இந்தியப் பிரதமர் நரேந்ர மோடி  மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இருவரும் இணைந்து முதலாவது நோயாளர் அம்பியூலன்ஸ் வண்டிகள் சேவையை கொடியசைத்து ஆரம்பித்து வைத்தனர்.

இந் நிகழ்வில் இலங்கை்கான இந்திய உயர்ஸ்தானிகள் தரஞ்சித்சிங் சந்து, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கொள்கை திட்டமிடல் மற்றும் பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் ஹர்ஷ டிசில்வா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இலங்கையின் எந்த வலையமைப்பினூடாகவும் ‘1990’ எனும் இலக்கத்தை அழைத்து இந்த இலவச அம்பியூலன்ஸ் சேவையை பெற்றுக் கொள்ள முடியும்.