வனஜீவராசிகள் திணைக்களத்திடம் உள்ள  முல்லைத்தீவு மக்களின் காணிகளை உரிய அதிகாரிகளிடம் தொடர்புகொண்டு பொது மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். 

முல்லைத்தீவில் இன்று பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் நான் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு வருகைதந்தபோது சில குறைபாடுகள் என்னிடம் முன்வைக்கபட்டது. அதில் முல்லைத்தீவு மத்திய பேருந்து நிலையம் அமைத்துதருமாறு கோரிக்கை முன்வைக்கபட்டது. அந்த வேண்டுகோளுக்கிணங்க நானும் எனது அமைச்சின் செயலாளரும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரோடு தொடர்பு கொண்டு இந்த முக்கிய தேவையாக இருக்கின்ற இந்த பேருந்து நிலையத்துக்கு அடிக்கல் நாட்டுவதற்காக இன்று இங்கு வருகைதந்திருக்கின்றோம்.

முல்லைத்தீவு மாவட்டமானது வறிய மக்களை கொண்ட மாவட்டமாக இன்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. காரணம் சுனாமி அனர்த்தத்தினாலும் கடந்த கால யுத்தத்தினாலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள மக்களை பார்கின்றபோது  யுத்ததால் உறவுகளை இழந்தவர்கள் மட்டுமல்ல பலர் விசேட தேவையுடையவர்களாகவும் இங்கு வாழ்ந்து வருகின்றார்கள். இந்த நிலையிலிருந்து உங்களை மீட்பதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.

அத்துடன் வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்காக எமது அரசாங்கம் பல பில்லியன் நிதிகளை ஒதுக்கியுள்ளது. குறிப்பாக நந்திக்கடல் களப்பின் அபிவிருத்திக்காகவும் நிதிகளை ஒதுக்கியிருக்கின்றோம். முல்லைத்தீவில் இரண்டு பாரிய பாலங்களை அமைப்பதற்கான வேலைத்திட்டத்தினையும் ஆரம்பிக்கவுள்ளோம். 

மேலும் சுழற்சிமுறையிலான நுண்கடன் திட்டங்களை பெற்று அவற்றை செலுத்த முடியாமல் இருக்கின்ற பெண்களின் கடன்களை சுமார் ஒரு இலட்சம் ரூபாய் வட்டி பணத்தினை செலுத்தி அதிலிருந்து அவர்களை முழுமையாக  விடுவிக்கின்ற வேலைத்திட்டமும் நாளை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது என்றார்.

மேலும் வனஜீவராசிகள் திணைக்களத்திடம் உள்ள  முல்லைத்தீவு மக்களின் காணிகளை உரிய அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பொது மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார். 

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் அமைச்சர் மங்கள சமரவீர, இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமசிங்க, ரிஷாத் பதியூதீன், காதர்மஸ்தான், வட மாகாண அமைச்சர் சிவநேசன் மற்றும் மாகாண சபை உறுப்பனர்களும் கலந்து கொண்டனர்.