(எம்.மனோசித்ரா)

நாட்டின் தேசிய வளங்களை அமெரிக்க இந்திய உள்ளிட்ட நாடுகளுக்கு கொடுத்துவிட்டு எமது நாடு சீனாவிடம் கையேந்திக் கொண்டிருக்கின்றது. மத்தள விமான நிலையம், அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் பலாலி விமான நிலையம் என்பவற்றை அரசு இந்தியாவிற்கு விற்பனை செய்துள்ளது.

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்கள் நிறைவடைந்துள்ளன. இம் மூன்று வருடங்களில் எமது நாட்டு வளங்களை வெளிநாடுகளுக்கும் தனியார் கம்பனிகளுக்கும் விற்பனை செய்ததே இந்த அரசாங்கத்தின் சாதனையாகும். நாட்டின் பெரும்பாலான தேசிய வளங்களை விற்பனை செய்து முடித்து விட்டார்கள். இனி விற்பனை செய்வதற்கு எதுவும் இல்லை என தெரிவித்த லங்கா சமசமாஜ கட்சி தலைவர் பேராசிரியர் திஸ்ஸவிதாரண,

நல்லாட்சி அரசாங்கம் எஞ்சியிருக்கும் ஒன்றரை வருட ஆட்சி காலத்தில் முழு இலங்கையை வெளிநாடுகளுக்கு தாரை வார்த்து விடும். இந்த அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகள் மூலம் உள்நாட்டு பிரஜைகளின் சுதந்திரத்திற்கும் எதிர்காலத்தில் பாதிப்பு ஏற்படலாம். சர்வதேச போக்குவரத்துடன் தொடர்புடைய வளங்கள் விற்கப்பட்டுள்ளன. இதனால் எதிர்வரும் காலங்களில் எமது நாட்டு யார் வேண்டும், யார் வரக் கூடாது என்பதையும் இலங்கையர்கள் எங்கு செல்ல வேண்டும், செல்லக் கூடாது என்பதையும் வெளிநாடுகளே தீர்மானிக்க வேண்டிய நிலைக்கு இலங்கை உள்ளாகலாம்.

எனவே இவ்வாறு தொடர்ச்சியாக தேசிய வளங்கள் விற்கப்படுகின்றமையை அனுமதிக்க முடியாது. இது தொடர்பில் மக்களுக்கு தெளிவு படுத்தப்பட வேண்டும். இவ்வாறான விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தே அடுத்த கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுப்பதற்கும் தீர்மானித்துள்ளோம் எனவும் தெரிவித்தார்.