(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

இலஞ்சம், ஊழல்களை இல்லாமல் செய்வதற்கு பாராளுமன்றத்தில் உள்ள 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்கி ஊழலில் இருந்து முதலில் வெளிவர வேண்டும் என அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இலஞ்சம் திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

இலஞ்சம், ஊழல்களை இல்லாமல் செய்வதற்கு பாராளுமன்றத்தில் உள்ள 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். முதலில் அரசியல்வாதிகள் ஊழலில் இருந்து வெளியேற வேண்டும் .

அரசியல்வாதிகளிடையே ஒழுக்கமில்லாத காரணத்தினாலேயே நாடு இன்னம் முன்னேற்றம் காணாமல் உள்ளது. மலேசியாவில் ஊழல் மோசடிகளில் ஈடுப்பட்ட காரணத்தினால் முன்னாள் பிரதமரை சிறையில் அடைத்துள்ளனர். மஹதீர் மொஹமட் அதற்கான ஏற்பாடுகளை அச்சமில்லாமல் செய்துள்ளார். 

இந்நிலையில் இலங்கை பெளத்த நாடு என்ற வகையில் பெளத்த தலைவர்களே ஆட்சி செய்கின்றனர். எனவே நீதியான முறையில் ஊழல் மோசடி இல்லாத நாட்டை நாம் உருவாக்க வேண்டும் என்றார்.