இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்டத்தில் இலங்கை அணி ஒன்பது விக்கெட்டுக்களை இழந்து 277 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி இலங்கையுடன் மூன்று டெஸ்ட் பேட்டிகளில் விளையாடி வருகிறது. அதன்படி காலி மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது போட்டித் தொடரில் இலங்கை அணி 278 ஓட்ங்களினால் அபாரமான வெற்றயீட்டி, தொடரில் 1:0 என்ற கணக்கில் முன்னிலையிலுள்ளது.

இந் நிலையில் இன்று கொழும்பு எஸ்.எஸ்.சீ. கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமான இரண்டாவது போட்டித் தொடரில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்தது.

இதற்கிணங்க ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களாக களமிறங்கிய தனுஷ்க குணதிலக்க மற்றும் திமுத் கருணாரத்ன ஜோடி இலங்கை அணி இலங்கையின் ஓட்ட எண்ணிக்கையை ஒரு வலுவான நிலைக்கு கொண்டு சேர்த்தனர். 

இருவரும் இணைந்து இலங்கை அணிக்காக 116 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பகிர்ந்து கொண்டனர். இருப்பினும் தென்னாபிரிக்க அணி சார்பில் அபாரமாக பந்து வீசி அசத்திய கேஷவ் மஹாராஜ் இவர்களின் ஜோடியை பிரித்தார். இதற்கிணங்க மஹாராஜின் பந்து வீச்சினை எதிர்கொள்ள முடியாத திமுத் கருணாரத்ன 53 ஒட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேற, அவரை தொடர்ந்து தனுஷ்க குணதிலக்கவும் 57 ஓட்டங்களை பெற்றிருந்தபேது ஆட்டமிழந்தார். 

அடுத்தபடியாக களமிறங்கிய தனஞ்சய டிசில்வா தனது நிதானமான ஆட்டத்தினூடாக 60 ஓட்டங்களை பெற்றுக் கொண்டு மஹாராஜின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணியின் வீரர்கள் மஹாராஜின் சுழல் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாது அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஆடுகளம் விட்டு நீங்கினர்.

இறுதியாக இலங்கை அணி போட்டியின் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவின் போது 86 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து 277 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர். 

போட்டியின் முதலாம் நாளில் அற்புதமாக பந்து  வீசிய கேஷவ் மஹாராஜ் 116 ஓட்டங்களுக்கு எட்டு விக்கெட்டுக்களை வீழ்த்தி அசத்தினார்.