(எம்.சி.நஜிமுதீன்)

“நிவ்யோர்க் டைம்ஸ் பத்திரிகைச் செய்தியின் மூலம் அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக முன்னெடுத்த வீண்பழியை கூட்டு எதிர்க்கட்சி தோல்வியடையச் செய்துள்ளது. எனினும் அக்குற்றச்சாட்டு தொடர்பிலான எந்தவொரு விசாரணையையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட கூட்டு எதிர்க்கட்சி எதிர்கொள்ள தயாராக உள்ளது" என  கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு  இன்று பத்தரமுள்ளையிலுள்ள அக்கட்சியின் தலமையகத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரைாயாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

"முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறித்து நிவ்யோர்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான தகவல் சம்பந்தமாக நேற்று பாராளுமன்றில் சபை ஒத்திவைப்பு விவாதம் நடைபெற்றது. அந்தச் செய்தி வெளியானது முதல் நாட்டில் மாத்திரமல்லாது சர்வதேச ரீதியிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக சேறுபூசும் நடவடிக்கைகைகளை முன்னெடுத்தனர்.

எனினும் நேற்று  பாராளுமன்றில் சபை ஒத்திவைப்பு விவாதம் ஆரம்பமானபோது இரண்டு முறை சபையின் கோரம் இல்லாது போனது. அந்த யோசனையை முன்வைத்த ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ளவர்கள்கூட விவாதத்தில் கலந்து கோரத்தை பாதுகாக்கவில்லை.

மேலும் குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் அரசாங்கம் விசாரணை மேற்கொள்வதாக இருந்தால் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிகும் உறுப்பினர்கள் அனைவரும் அதனை எதிர்கொள்வதற்கு தயார் என்தையும் நாம் அரசாங்கத்திடம் ஏற்கனவே தெரிவித்துள்ளோம். அத்துடன் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சீன நிறுவனத்திற்கு தொடர்ந்தும் அரசாங்கம் வேலைத்திட்டங்களை வழங்கியுள்ளது. எனினும் விசாரணைக்காகவாவது குறித்த நிறுவனங்களிடம் வழங்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி விசாரணை நடைத்துமாறு நாம் அரசாங்கத்திடம் வேண்டிக்கொண்டிருந்தோம். 

மேலும் நேற்றைய  விவாதத்தின் போது விசாரணை அறிக்கையை பாராளுமன்றில் சமர்ப்பிக்குமாறு வேண்டிக்கொண்டிருந்தோம். எனினும் அதனை அரசாங்கம் செய்யவில்லை. ஆகவே அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக முன்னெடுத்த வீண்பழியை கூட்டு எதிர்க்கட்சி தோல்வியடையச் செய்துள்ளது. 

மேலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளதால் நேற்று பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொள்ள முடியவில்லை. இருந்தபோதிலும் அக்குற்றச்சாட்டு தொடர்பில் அவர் ஊடகங்கள் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார். அத்துடன் நீதிமன்றில் வழக்குத் தொடரப்படுமிடத்து அதனை அவர்  எதிர்கொள்வார். 

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த தலைவராக அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தைக் கொண்டுவருவதற்கான வேலைத்திட்டங்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்து வருகிறார். முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன ரணில் விக்ரமசிங்கவை கல்வியமைச்சராக்கினார். அதன் வழித்தோன்றலில்தான் அவர் கட்சியின் தலமைக்கு வந்துள்ளார். அவ்வாறான ஏற்பாட்டையே பிரதமர் ரணில் விக்ரமசிங்க கட்சிக்குள் மேற் கொண்டு வருகிறார். கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் இருக்கும்போது அகிலவிராஜ் காரியவசத்தை கட்சியின் செயலாளராக தற்போது நியமித்துள்ளார். 

கல்லிவயமமைச்சர் பதவி வகிக்கும் அகிலவிராஜ் காரியவசம்  தற்போது கல்வித்துறையை சீரழிப்பதனை அவதானிக்க முடிகிறது. கல்வித்துறையை அபிவிருத்தி செய்வதாக வழங்கிய எந்தவொரு வாக்குறுதியையும் அவர் நிறைவேற்றவில்லை. “அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். ஆனால் “சிறந்த போதைப்பொருள் வேண்டுமானால் அருகிலுள்ள பாடசாலைக்குச் செல்ல வேண்டிய” நிலையையே ஏற்படுத்தியுள்ளார். போதைப்பொருள் பகிர்தளிக்கும் நிலையமாக பாடசாலைகளை மாற்றியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.