(எம்.எம்.மின்ஹாஜ்இ ஆர்.யசி)

உலகின் மரபுரிமை பிரதேசங்களில் இருந்து இலங்கையின் காலி, தம்புள்ளை மற்றும் சிங்கராஜ வனம் நீக்கப்படும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் யுனெஸ்கோ இலங்கைக்கு கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளதாகவும் உயர்கல்வி மற்றும் கலாசார அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலி மைதானம் அகற்றப்படுவது குறித்த சர்ச்சைகள் எழுந்துள்ளதாக பொது எதிரணி உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

"இலங்கையின் முக்கிய பிரதேசங்கள் பல இன்று உலக மரபுரிமை பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள போதிலும் அவற்றில் பல  அழியக்கூடிய நிலைமைகள் எழுந்துள்ளன. குறிப்பாக இலங்கையின் மூன்று இடங்களான காலி கோட்டை பகுதி, தம்புள்ளை மற்றும் சிங்கராஜ வனப்பகுதி ஆகியன  இவ்வாறு உலக மரபுரிமை இடங்களில் இருந்து நீக்கப்படும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப் பகுதிகளில் ஏற்படும் சட்டவிரோத செயற்பாடுகள் அனாவசிய குடியேற்றங்கள், காடழிப்பு, தொல்பொருள் அழிவுகள் காரணமாக யுனெஸ்கோ இந்த எச்சரிக்கையை எமக்கு விடுத்துள்ளது. 

ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரத்துடன் யுனெஸ்கோ முன்னெடுக்கும் இந்த செயற்பாடுகளுக்கு நாம் கட்டுப்பட்டு செயற்படுவதுடன் அவர்களின் சட்ட திட்டங்களுக்கு அமையவும், ஆலோசனைகளுக்கு அமையவும் நாம் செயற்படவேண்டிய கட்டாயம் உள்ளது. ஆகவே நாம் இவற்றை  அரசாங்கமாக கவனத்தில் கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆகவே புராதான மரபுரிமை பிரதேசங்களை கருத்தில் கொண்டு அவற்றை நாம் பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம்." என  குறிப்பிட்டார்.