(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான செய்தியுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீதான ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சி கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவோ ஏனைய ராஜபக்ஷக்களோ கலந்துகொள்ளவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆளும் தரப்பு உறுப்பினர்கள் மௌனம் காத்தனர்.

சீன நிறுவனமொன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ஜனாதிபதி தேர்தல் காலத்தில் 7.6 மில்லியன் டொலர் நிதியை வழங்கியுள்ளதாக தகவல் வெளியிட்டு நியூயோர்க டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தி தொடர்பாக இன்று பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சியினரால் சபை ஒத்தி வைப்பு வேளை பிரேரணை மீதான விவாதம் இடம்பெற்றது. 

நண்பகல் 12 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த விவாதத்தின் ஆரம்பம் முதற்கொண்டே பொது எதிரணியினர் விவாதத்தில் இடையூறுகளை ஏற்படுத்தினர். ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துசார இந்துநில் அமரசேனவினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு பிரேரணையின் போது அவரது நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் அறிக்கை வாசிக்கப்படவில்லை எனவும் ஆங்கிலத்தில் அந்த அறிக்கையை வாசிக்க வேண்டும் எனவும் பொது எதிரணியினர் கூச்சலிட்டு சபையில் குழப்பங்களை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.