உலக மரபுரிமை இடத்தை பாதுகாப்பது மட்டுமல்லாது காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை தொடர்ந்தும் பயன்படுத்த சரியான செயற்திட்டத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் கிரிக்கெட் நிர்வாகம் எடுக்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவரும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். 

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவரும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய பிரச்சினைக்கு காரணம் கிரிக்கெட் நிர்வாக சபையும் கடந்தகால அரசாங்கத்தின் குறைபாடுமே ஆகும்.  

காலி நகரத்தை உலக மரபுரிமைகள் நகரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை எமக்கு தெரிந்ததே. ஆனாலும் மறுபக்கத்தில் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை எம்மால் இழக்க முடியாது. இதனால் நமக்கு உலக மரபுரிமையையும் கிரிக்கெட் மைதானத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு உள்ளது. 

தற்போது எமக்கு தெரியும் விளையாட்டுத்துறைக்கு அமைச்சர் ஒருவர் இருப்பது பற்றி. ஆனால் எனக்குத் தெரியாது கிரிக்கட் நிர்வாக சபை இருக்கின்றதா என்று. ஆனாலும் இந்த பிரச்சினைக்கு விளையாட்டுத்துறை அமைச்சரும் கிரிக்கெட் நிர்வாகமும் முக்கிய முடிவை எடுக்கவேண்டும். காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை இல்லாமலாக்க முடியாது.

இந்த காலி சர்வதேச கிரிக்கெட் மைதானம் தொடர்பான பிரச்சினை இன்று உருவானதல்ல. நான் கிரிக்கெட் சபை தலைவராக இருந்த காலத்திலேயே இந்த பிரச்சினை இருந்துள்ளது. 

குறிப்பாக ஒருநாள் பகலிரவு போட்டியை நடத்துவதற்கு மைதானத்தில் பெரிய மின்விழக்குகளை பொருத்த தீர்மானிக்கப்பட்ட போது உலக மரபுரிமைகள் அமைப்பு அதனை செய்ய இடமளிக்கவில்லை. 

அதனால் அந்த திட்டம் நிறைவேறவில்லை. இந்த மைதானம் இலங்கைக்கு மிகமுக்கியமான மைதானமாகும். காரணம் இலங்கை அணி டெஸ்ட் போட்டிகளில் இலகுவாக வெற்றியை அடையக்கூடிய மைதானமாகும். எமது காலத்திலும் அப்படித்தான் இருந்தது. இன்று தென்னாபிரிக்காவை எதிர்த்து இலங்கை அணி வெற்றி பெற்றமை இந்த மைதானத்திலேயே. இதனால் நாம் காலி மைதானத்தை பாதுகாக்க சரியான முறையில் செயற்திட்டமொன்றை முன்னெடுக்கவேண்டும்.

எனது பார்வையில் இன்று காலி மைதானம் எதிர்கொள்ளும் பிரச்சினையானது கடந்த அரசாங்கத்தினாலேயே. காரணம் உலக மரபுரிமையான பகுதியில் கட்டிடம் எழுப்பக்கூடாது என்று இருந்தது. ஆனால் என்ன நடந்தது கடந்த அரசாங்கத்தில் பெரிய கட்டிடம் ஒன்று கட்டப்பட்டது. அதை இடிக்க சொன்ன போது அந்த கட்டிடத்துக்கு 'மகிந்த ராஜபக்ஷ பெவிலியன்' என்ற பெயரை வைத்து கட்டிடத்தை இடிக்க விடாமல் தடுத்தனர். இங்கு தான் தவறு நடந்து.

பிரச்சினைக்கு காரணம் அநாவசியமாக கட்டப்பட்ட கட்டிடம் என்றால் பேச்சுவார்தையின் மூலம் ஒரு முடிவுக்கு வந்து இந்த கட்டிடத்தை எடுத்துவிட்டால்  இந்த மைதானத்தை எம்மால் பயன்படுத்த முடியும். 

தற்காலிக பெவிலியன் மூலம் மைதானத்தை எம்மால் தொடர்ந்து பயன்படுத்த முடியும். சரியான முடிவு எடுக்காமைக்கு  மறைமுக அழுத்தங்கள் உள்ளதா என்று எனக்குத் தெரியாது. காலி மற்றும் மொரட்டுவை மைதானங்கள் இலங்கை அணிக்கு சாதகமான மைதானங்களாகும். கிரிக்கெட் நிர்வாகத்தில் இந்த மைதானத்தை பாதுகாக்க எவரும் இன்று இல்லை என அவர் மேலம் தெரிவித்தார்.