(எம்.எப்.எம்.பஸீர்)

பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் கொலை விவகாரம் தொடர்பில் இதுவரை சுமார் ஆறு சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கொழும்பு மேலதிக நீதிவானின் உத்தரவுக்கு அமைய இவர்கள் அடுத்து வரும் சில நாட்களில் கைது செய்யப்படவுள்ளதாக அந்த தகவல்கள் சுட்டிக்காட்டின.  

16 சாட்சியங்களின் அடிப்படையிலேயே இந்த ஆறு பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்துவதனூடாக  குறித்த கொலை தொடர்பிலான மேலதிக தகவல்கள் மற்றும் கொலைக்கான காரணத்தையும்  வெளிப்படுத்திக்கொள்ள முடியும் என புலனாய்வுப் பிரிவினர்  தெரிவித்துள்ளன.  

இவ்வாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேக நபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள ஆறு பேரில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சாரதியாக செயற்பட்டவர் என நம்பப்படும் கெப்டன் விமலசேன என்பவரும் உள்ளடங்குவதாக தெரியவருகின்றது.