அமெரிக்க ஜனாதிபதி என்ற வகையில் டொனால்ட் ட்ரம்பின் பதவிக்காலம் எந்தவிதத்திலும் மரபுவழிப்பட்டதல்ல. பின்லாந்து தலைநகர் ஹெல்சிங்கியில் அவருக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் இடையிலான சந்திப்பு பெரும்பாலான பாரம்பரிய உச்சி மகாநாடுகளைப் போன்று இருக்கப்போவதில்லை என்பது பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. 2016 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பெருமளவுக்கு தலையீடுகளைச் செய்வதற்கு வகுக்கப்பட்ட ஏற்பாடுகளை மேற்பார்வை செய்ததாக அமெரிக்க புலனாய்வு நிறுவனங்களினாலும் வேறு பலராலும் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரையே ட்ரம்ப் சந்தித்தார். அந்தத் தேர்தலே அவரை வெள்ளைமாளிகைக்கு கொண்டுவந்தது. 

கடந்த இரு ஜனாதிபதிகளும் கூட்டாக நடத்திய செய்தியாளர் மகாநாடு முடிவடைந்த கையோடு அமெரிக்க ஊடகமொன்று ட்ரம்ப் ரஷ்ய ஜனாதிபதிக்கு ' வியக்கத்தக்கவகையில் அடங்கிப் போயிருந்தார் ' எனறு வர்ணித்தது.இன்னொரு ஊடகம் ட்ரம்பின் செயற்பாடு ' தனிப்பட்ட அவமானம் மாத்திரமல்ல, தேசிய அவமானமுமாகும் ' என்று குறிப்பட்டது.

புட்டினுக்கு பக்கத்தில் நின்றுகொண்டு அமெரிக்க புலனாய்வு நிறுவனங்களுக்கு முரண்பாடாகக் கருத்துக்களை ட்ரம்ப்  கூறியதைப் பார்க்கும்போது அந்த ஊடக நிறுவனங்கள் வெளிக்காட்டிய பிரதிபலிப்பு எந்தவகையிலும் ஆச்சரியப்படத்தக்கவை அல்ல. ட்ரம்பின் தேசிய புலனாய்வுப் பணிப்பாளர் டான் கோற்ஸ் அவரின் செயற்பாடுகளை கடுமையாக ஆட்சேபித்து வெளியேறி, 2016 தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு மற்றும் அமெரிக்க ஜனநாயகத்தை மலினப்படுத்துவதற்கான தற்போதைய முயற்சிகள்  பற்றிய புலனாய்வு சமூகத்தின் மதிப்பீட்டை மீளவும் நியாயப்படுத்திக் கருத்து வெளியிட்டதைக் காணக்கூடியதாக இருந்தது.  

தேர்தலில் ரஷ்யா தலையீடு செய்திருக்கக்கூடிய சாத்தியங்களை ஏற்றுக்கொள்வதற்கு ட்ரம்ப் மறுப்பதற்கு காரணம் அவ்வாறு ஏற்றுக்கொண்டால் தனது  எதிர்ப்பாளர்களை அது பலப்படுத்திவிடும் என்று அவர் அஞ்சுவதேயாகும் என்று கூட சிலர் அபிப்பிராயம் வெளியிட்டிருக்கிறார்கள். சபாநாயகர் போல் றையன் போன்ற  குடியரசு கட்சியின் உயர்மட்டத் தலைவர்களும் கூட ட்ரம்பின் கருத்துக்களை கண்டனம் செய்திருக்கிறார்கள். ரஷ்யாவை ஒரு நட்பு நாடாகவும் நேச அணியாகவும் பார்ப்பதை ட்ரம்ப் நிறுத்திக்கொள்ளவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

இராஜாங்கத் திணைக்களத்தின் நிபுணர்களின் விவேகமான ஆலோசனைகளின் அடிப்படையில் அன்றி கூடுதலான அளவுக்கு தனிப்பட்ட தொடர்புகளையும் தனது சுபாவத்தையும் அடிப்படையாகக் கொண்ட ட்ரம்ப் பாணி இராஜதந்திரம் பலவீனமானதாகவும் வீணானதாகவுமே தோன்றுகிறது. அமெரிக்காவிலும் ஏனைய நாடுகளிலும் தனிப்பட்ட முறையில் தலையீடுகளைச் செய்வதாக மேற்குலக நாடுகளின் புலனாய்வு நிறுவனங்களினால் குற்றஞ்சாட்டப்பட்டுவருகின்ற புட்டின்  முன்னரைக் காட்டிலும் ட்ரம்புடனான உச்சிச் சந்திப்புக்குப் பிறகு பெருமளவுக்கு பலம்பொருந்தியவராக வெளிக்கிளம்பியிருக்கிறார்.

அமெரிக்க ஜனாதிபதி ஐக்கிய இராச்சியத்துக்கு மேற்கொண்ட சர்ச்சைக்குரிய விஜயத்தைத் தொடர்ந்தே ஹெல்சிங்கி தோல்வி வந்திருக்கிறது. பிரிட்டனில் இருந்தவேளை ட்ரம்ப் பிரதமர் தெரேசா மேயின் பிரெக்சிட் கொள்கையைக் கடுமையாக விமர்சித்தார். அமெரிக்கா மற்றைய நாடுகள் மீது விதிக்கின்ற தடைகளை நடைமுறைப்படுத்துவதில் முக்கியமான பாத்திரத்தை 28 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் வகிக்கின்ற போதிலும், அந்த அமைப்பையும் வர்த்தக எதிரி என்று ட்ரம்ப் வர்ணித்தார். ஜேர்மன் அதிபர் அஞ்செலா மெர்கெலை தனிப்பட்டமுறையிலும் அவர் தாக்கிப் பேசினார். அதனால், ஜேர்மனி போன்ற அமெரிக்காவின் நீண்டகால நேச நாடுகள் தற்போதைய வெள்ளை மாளிகை மீது நம்பிக்கை வைத்து இனிமேலும் செயற்படமுடியாது என்று வெளிப்படையாகவே கூறுகின்றன.

தனது முதலாவது பதவிக்காலத்தின் எஞ்சிய வருடங்களில்  சர்வதேச  அரங்கில் முக்கியத்துவமில்லாத ஒரு பாத்திரத்தை வகிக்கவேண்டிய சாத்தியத்தையே ட்ரம்ப் இப்போது எதிர்நோக்குகிறார். அமெரிக்காவின் ஐரோப்பிய நேச நாடுகள் இரண்டாவது உலக மகாயுத்தத்துக்கு பின்னரான காலகட்டத்தில் கட்டியெழுப்பிய பலம்பொருந்திய பாரம்பரிய பிணைப்புக்களை காப்பாற்றுவதில் பெரும் நெருக்கடிகளை ட்ரம்பின் தான்தோன்றித்தனமான கொள்கை மற்றும் செயற்பாடுகளின் விளைவாக எதிர்நோக்கவேண்டியிருக்கிறது.

 

(வெளியுலக அரசியல் ஆய்வுக்களம்)