இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் தோல்வியடைந்த பின்னர் டோனி, நடுவர்களிடமிருந்து பந்தை பெற்றுக் கொண்ட சம்பவம் ரசிகர்களிடையே டோனி ஓய்வுப் பெறப்போகின்றாரா என்ற கேள்விகளை தோற்றுவித்துள்ளது.

அந்த வகையில் லீட்ஸ் மைதானத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் தொடரில் தோல்வியடைந்த இந்திய வீரர்கள், ஆடுகளத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கும் போது டோனி நடுவர்களான அக்ஷன்போர்ட் மற்றும் மைக்கேல் கோஹ்கிடமிருந்து பந்தை கேட்டு வாங்கியுள்ளார்.

குறித்த இந்த காட்சியனாது சமூகதளங்களில் வெளியானதையடுத்து ரசிகர்கள் மத்தியில் டோனி ஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு பெறப் போகின்றாரா என்ற கேள்வியை தோற்றுவித்துள்ளது. காரணம் பொதுவாக போட்டித் தொடரை வெற்றி பெற்றாலோ அல்லது சிறப்பாக பந்து வீசினாலோ வீரர்கள் ஸ்டம்ப் அல்லது பந்தை நினைவாக எடுத்து செல்வார்கள்.

ஆனால் தோல்வியடைந்த போட்டியில் டோனி பந்‍‍தை வாங்கியமையினாலேயே மேற்கண்ட கேள்வி எழுந்துள்ளது.

இந் நிலையல் அவர் பந்தை வாங்கிய காரணத்தை இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறுகையில்,

டோனி அந்த பந்‍தை வாங்கியது போட்டிக்குப் பின் பந்தின் தன்மை எப்படி இருக்கிறது, என்ன நிலையில் இருக்கிறது என்பதை பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருணிடம் காண்பிக்கவே தவிர மற்றபடி அதில் வேறு ஒன்றுமில்லை எனக் கூறியுள்ளார்.

எவ்வாறிருப்பினும் 37 வயதான டோனி அடுத்த வருடம் இடம்பெறவுள்ள உலக கிண்ணத் தொடர் வரை விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.