வேலையின் முதல் நாளில் உரிய நேரத்தில் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என்ற கடமை உணர்வினால் 32 கிலோமீற்றர் தூரம் நடந்து சென்று அலுவலத்தை வந்தடைந்த ஊழியரை பார்த்த முதலாளி அவருக்கு தனது காரை பரிசாக அளித்த சம்பவமொன்று அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

அலபாமா மாநிலத்தில் பிரிமிங்ஹாமில் 22 வயதையுடைய வால்டர் எனும் இளைஞர் படித்து முடித்துவிட்டு அப் பகுதியலுள்ள நிறுவனமொன்றில் பகுதி நேர தொழில் ஈடுபட இணைந்துள்ளான்.

இந் நிலையில் வேலை கிடைத்ததும் முதல்நாள் பணிக்கு உரிய வேளையில் சமூகமளிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக கையில் பணம் இல்லாத காரணத்தினால் பெல்ஹாம் நகரிலிருந்து 32 கிலோமீற்றர் தொலைவிலுள்ள அலுவலகத்திற்கு அதிகாலை திட்டமிட்டு நடக்கத் தொடங்கினார்.

இதன்போது அதிகாலை 4 மணி அளவில் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருநத பொலிஸார், அவரை மடக்கிப் பிடித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அப்போது வால்டர் தன்னுடைய குடும்ப சூழலைக் கூறி வேலைக்கு முதன்முதலாகச் செல்கிறேன், கையில் பணம் இல்லாததால் நடந்து செல்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதைக் கேட்ட இரக்கப்பட்ட பொலிஸார் அவருக்கு உணவு வாங்கிக்கொடுத்து விடிந்த பின் செல்லலாம் எனக் கூறி ஒரு தேவாலயத்தில் தங்கவைத்துள்ளனர்.

அதன்பின் காலையில் அந்த பொலிஸார் வால்டரை அழைத்துக் கொண்டு தங்களின் தோழி லேமே என்பவர் வீட்டுக்குச் சென்றனர். லேமே என்பவர் நாள்தோறும் பிரிமிங்ஹாம் நகருக்கு வேலைக்கு காரில் செல்பவர். அவரிடம் வால்டர் காரின் கதையைக் கூறி, பிர்மிங்ஹாம் நகரில் உள்ள அவரின் நிறுவனத்தில் கொண்டுபோய் இறக்கிவிடுமாறு கேட்டுக்கொண்டனர்.

வால்டர் காரின் கதையைக் கேட்டு நெகிழ்ந்த லேமே, தனது காரில் வால்டரை அழைத்துக் கொண்டு நிறுவனத்தில் இறக்கிவிட்டார். மேலும், அந்த நிறுவனத்தின் முதலாளியும், தலைமை நிர்வாக அதிகாரியுமான மார்க்லினிடம் இந்தக் கதையைக் கூறி தனது முகப்புத்தகத்தில் பகிர்ந்துள்ளார்.

தனது ஊழியரின் அர்ப்பணிப்பு உணர்வைப் பார்த்து வியந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க்லின் தான் பயன்படுத்திய காரை வால்டருக்குப் பரிசாக அளித்து அவரை நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளார்.