(எம்.ஆர்.எம். வசீம்)

அரசியலமைப்பு சீர் திருத்தம் தொடர்பாக பொது மக்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை நாளையுடன் நிறைவடைகின்றன. இறுதி நாளான நாளை அம்பாறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் கருத்துக்களை பெறும் நடவடிக்கைகள்   இடம்பெறும் என  நிபுணர் குழுவின்  தலைவர் லால் விஜேநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர்மேலும் தெரிவிக்கையில்,

அரசியலமைப்பு சீர் திருத்தம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறியும் நிபுணர்குழு  கடந்த ஜனவரி 18ஆம் திகதி முதல் 22ஆம் திகதிவரை கொழும்பு மாவட்டத்தில்  பொது மக்களின் கருத்துக்களை கேட்டறியும் நடவடிக்கையை ஆரம்பித்தது. 

இந்த காலப்பகுதியில் நாங்கள் எதிர்பார்த்ததையும் விட மக்கள் மிகவும் ஆர்வத்துடன் தங்கள் கருத்துக்களை தெரிவித்திருந்தனர். அந்தவகையில் மின்னஞ்சல் மூலமாக 400க்கும் மேற்பட்டோர் தங்கள் கருத்துக்களை தெரிவித்திருந்தனர். 140பேர் எழுத்துமூலமும் 70பேர் பெக்ஸ் ஊடாகவும் யோசனைகளை  தெரிவித்திருந்தனர்.  258பேர் நேரடியாக எங்கள் முன்தோன்றி தங்களது கருத்துக்களை மிகவும் ஆர்வத்துடன் தெரிவித்தனர். 

அத்துடன் சமூக வலைத்தளங்களான பேஸ்புக், டுவிட்டர் மூலமும் பொது மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்திருந்தனர். அதுமட்டுமன்றி தொழிற்சங்கங்கள் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்களும் அரசியலமைப்பு தொடர்பாக ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.