எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி

வடக்கில் உருவாகியுள்ள ஆவா குழு பயங்கரவாத குழுவல்ல. சட்டம் ஒழுங்கு சீர்குலைவாகவே அதனை கருத வேண்டியுள்ளது. ஆவாகுழுவின் செயற்பாடுகளை கட்டுபாட்டுகுள் கொண்டு வருவதற்கு சட்டம் ஒழுங்கு அமைச்சும் பொலிஸாரும் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற குழு தலைவர் தினேஷ் குணவர்தன எம்.பி எழுப்பிய கேள்வியை அடுத்து எழுந்த சர்ச்சையடுத்து அதற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிரதமர ரணில் விக்கிரமசிங்க மேலும் உரையாற்றுகையில்,

இராணுவத்தினரின் எண்ணிக்கை தொடர்பிலும் முகாம்கள் தொடர்பிலும் இராணுவமே அதற்கான தீர்மானங்களை எடுக்கின்றன. இந்த விவகாரங்களில் நானோ அல்லது ஜனாதிபதியோ தலையீடுவதில்லை. 

இராணுவ பதவி வகைகளான ஜெனரல், கெர்னல், மேஜர் போன்ற பதவி தரங்களை நாம் குறைக்கவில்லை.

யுத்ததிற்கு பின்னர் முகாம்கள் குறைப்பது சாதாரண விடயமாகும். இரண்டாம் உலக யுத்தம் நடைபெற்ற பின்னர் இதுதான் நடந்தது. இராணுவத்திற்கான ஒதுக்கீடு செய்யும் நிதியில் மூலதன செலவாக இராணுவ தலைமையகத்திற்கான புதிய கட்டடத்திற்கே அதிகளவு செலவிடப்படுகின்றது. பழைய இராணுவ தலைமையகத்திற்கான காணிகளை ஏன் விற்கப்பட்டது. அதன் காரணமாகவே வீணாக புதிய கட்டடத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.

அத்துடன் வடக்கில் உருவாகியுள்ள ஆவா குழு பயங்கரவாத அமைப்பு அல்ல. ஆயுத குழுவாகவும் அதனை கருத முடியாது. அது இராணுவத்துடன் சம்பந்தப்பட்டதல்ல. சட்டம் ஒழுங்கு சீர்குலைவாகவே அதனை கருத வேண்டியுள்ளது. ஆகவே இது தொடர்பாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார். அண்மையில் அமைச்சரும் பிரதி அமைச்சரும் வடக்கிற்கு விஜயம் செய்து நிலைமைகளை கண்டறிந்து வந்தனர். இதனால் அச்சம் கொள்ள தேவையில்லை என்றார்.