(எம்.சி.நஜிமுதீன்)

ச.தொ.ச பைகளிலிருந்து கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் ஹெரோயின் போதைப் பொருளுக்கும் ச.தொ.ச. நிறுவனத்துக்குமிடையில் தொடர்புள்ளதாக சிலர் தெரிவிப்பதை வன்மையாக கண்டிக்கின்றோம் என ச.தொ.ச. நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றதிகாரி ஏ.எச்.எம்.பராஸ் தெரிவித்துள்ளார்.

ச.தொ.ச. நிறுவனம் ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு நிறுவனத்தின் பிரதான காரியாலயத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,

ச.தொ.ச. அரசி பைகளிலிருந்து ஹெரோயின் போதைப்பொருளை பாதுகாப்பு பிரிவினர் கண்டெடுத்த விடயம் கடந்த சில தினங்களில் ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டடு வந்தது. அதனால் ச.தொ.ச. நிறுவனத்தின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அச்செய்தியானது தற்போது சமூக ஊடங்களில் வேறு கண்ணோட்டத்தில் நோக்கப்படுவதோடு, அமைச்சர் ரிஷாத் பதியுதீனை அதனுடன் தொடர்புபடுத்த சிலர் முனைகின்றனர்.

ச.தொ.ச. நிறுவனத்தின் இலட்சினை பொறிக்கப்பட்டுள்ள பைகளில் ஏதாவதொன்று கண்டெடுக்கப்படுவதற்காக அதன் பொறுப்பை ச.தொ.ச.  நிறுவனத்திற்குச் சாட்ட முடியாது. சதொச நிறுவனமானது மக்கள் மயப்படுத்தப்பட்ட நிறுவனமாகும். ஆகவே அதனை சீர்குலைப்பதற்கு எவருக்கும் இடமளிக்க வேண்டாம் என்றார்.