(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

பாதுகாப்பு படைகளை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக கைவிட்டு, தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொது எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கில் இராணுவ முகாம்கள் அகற்றப்படுவதாகவும், இராணுவத்தில் 25 வீத படையணியினர் நீக்கப்படுவதாகவும் இராணுவம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவித்தலானது  மிகவும் பாரதூரமான விடயமாகும்.

குறிப்பாக இராணுவத்தின் 39 படையணிகள்  குறைக்கப் படுகின்றதுடன் இதில் 938 உயரதிகாரிகள் மற்றும் 23 ஆயிரத்து 266 படையணியினர் குறைக்கப்படும் நிலைமை இன்று ஏற்பட்டுள்ளது. ஆனால் இராணுவத் தளபதி அவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறவில்லை என கூறி உண்மைகளை மறைத்து வருகின்றார்.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் புலம்பெயர் புலி அமைப்புகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் செயற்பட்டு வருகின்றமை மிகவும் மோசமானதாகும். தகுதியான இராணுவ அதிகாரிகள் படைகளில் இருந்து நிராகரிக்கப்படுகின்றமை, இராணுவம் பலவீனப்படுத்தப் படுகின்றமை காரணமாக இடை நிலையில் உள்ள இராணுவ அதிகாரிகள் தமது எதிர்கால எதிர்ப்பார்ப்புகளை வெறும் கனவாக மாற்றிக்கொள்ளும் நிலைமையே உருவாக்கியுள்ளது. 

மறுபுறம் புலிகளுக்கு நட்டஈடு கொடுக்கும் அமைச்சரவை பத்திரம் அமைச்சரவையில் அங்கீகரிக்கப்படுகின்றது, சைனட் கடித்துக்கொண்டு உயிரை மாய்த்த புலிகளுக்கு வடக்கில் தூபி எழுப்பப்படுகின்றது. இந்த அரசாங்கம் ஆட்சியில் இதுவரை 84 ஆயிரம் ஏக்கர் இராணுவ காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளது. 

ஆவா குழுக்களின் பயங்கரவாத செயற்பாடுகள் மீண்டும் தலைதூக்கி வருகின்றது, கிளைமோர் குண்டுகள் மீட்கப்படுகின்றது. இவற்றையெல்லாம் தாண்டி விஜயகலா மகேஸ்வரன் வடக்கில் மீண்டும் புலிகள் உருவாக வேண்டும் என்ற அழைப்புக் குரல் எழுப்புகின்றார்.  இவற்றுக்கு மத்தியில் இராணுவத்தை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றமை ஏற்கத்தக்க ஒன்றாக அமையாது. 

ஆகவே அரசாங்கம் பாதுகாப்பு படைகளை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக கைவிட்டு தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.