யாழில் இந்திய துணைத் துாதருடன் ஆளுனர் : முதலமைச்சர் சீ.வி

Published By: Robert

28 Feb, 2016 | 02:47 PM
image

இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டமானது 1964 ஆம் ஆண்டு மனித வள விருத்தியில் இந்தியாவின் இருவழி உதவித் திட்டமாக ஆரம்பிக்கப்பட்டதாக இந்தியத் துணைத்தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத்திட்ட மற்றும் சர்வதேச மாணவர் தினம், யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தால் நேற்று கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்வுக்கு வடக்கு மாகாண ஆளுநர் றெஜினால்ட் குரே மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சீ.வீ. விக்னேஸ்வரன் ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.

இந்தியாவில் தமது பயிற்சி நெறிகளைப் பூர்த்தி செய்தவர்கள், இந்தியாவில் தமது பட்டப் படிப்புக்களை மேற்கொண்டவர்கள் மற்றும் வட மாகாண சபையின் முதுநிலை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

குறித்த தினத்தையொட்டி யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகம் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது, இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்தின் மிக முக்கிய பங்காளியாகவும் கொழும்புத் திட்ட புலமைப்பரிசில் திட்டத்தினதும் பங்காளியாகவும் இலங்கை அமைகின்றது.

இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு திட்டமானது வருடாந்தம் 208 பயனாளர்களுக்கு தகவல் தொழில்நுட்பம், ஆங்கில மொழி, முகாமைத்துவம், கிராம அபிவிருத்தி நிதி முகாமை, வெகுஜன ஊடகம், தொலையுணர்தல் போன்ற துறைகளில் ஆற்றல் விருத்தியையும் பயிற்சியையும் வழங்குகிறது.

புலமைப்பரிசில் திட்டத்தின் மூலம் பிரயாணம், பயிற்சி, தங்குமிடம் ஆகிய அனைத்து செலவுகளும் இந்திய அரசால் பொறுப்பேற்கப்படுகிறது.

அத்துடன் மாதாந்தம் வாழ்க்கைச் செலவுக்காக இந்திய ஷரூபா 25000, புத்தக கொள்வனவுப்படி இந்திய ஷரூபா 5000, வரலாற்று முக்கியம் வாய்ந்த இடங்களுக்கான கல்விச் சுற்றுலா செலவு மற்றும் மருத்துவ செலவு என்பன இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்றன.

இலங்கையின் உள்நாட்டுப் போர் 2009 மே மாதமளவில் முடிவிற்கு வந்ததன் பின்னர், இந்தியத் துணைத் தூதரகமானது நவம்பர் 2010 இல் யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டது.

தூதரகம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து அபிவிருத்திப் பணிகளில் குறிப்பாக பொருளாதார அபிவிருத்திகளை மேம்படுத்தவும் மேலும் கற்கைகளுக்கான பயிற்சி நெறிகளையும் வடக்கு மாகாண மக்களுக்கு வழங்கி வருகின்றது.

அவற்றில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டமும் ஒன்றாகும்.

அதே போன்று வடக்கு மாகாண மக்கள் பலர் தமது பட்டப்படிப்புக்களை, பட்ட மேற்படிப்பை, கலாநிதிப் படிப்புக்களை இசை, நடனம், ஓவியம் வரைதல் உள்ளிட்ட துறைகளில் புலமைப்பரிசில் மற்றும் சுய நிதியிடல் மூலம் பூர்த்தி செய்துள்ளனர்.

இவர்களில் அநேகமானவர்கள் இன்று அரச மற்றும் தனியார் துறைகளில் மிகவும் உயர் பதவிகளில் சேவையாற்றுகின்றனர்.

சர்வதேச மாணவர்கள் தினமானது சுதந்திர இந்தியாவின் முதலாவது கல்வியமைச்சர் மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் நினைவாக அனுசரிக்கப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- நவம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்