தென்னாப்பிரிக்காவின் முதலாவது ஜனநாயக ஜனாதிபதியும் கறுப்பின மக்களின் உரிமைகளுக்காக நீண்ட நெடிய போராட்டம் நடத்தியவருமான நெல்சன் மண்டேலாவின் 100 ஆவது பிறந்த தினம் இன்று. 

2009 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை மண்டேலாவின் பிறந்த நாளை சர்வதேச நெல்சன் மண்டேலா தினமாக அறிவித்தது. முதன்முறையாக ஒரு தனி நபருக்கான ஒரு நாளை சர்வதேச ரீதியாக வழங்குவது அவருக்காகத்தான் நிகழ்ந்தது.

குடும்பத்திலிருந்து முதலாவது நபராக பாடசாலை சென்ற மண்டேலா, இளம் வயதில் ஆடு, மாடு மேய்த்துக்கொண்டே படித்த இவர் போர் புரியும் கலைகளையும் பயின்றார். 

கல்வியறிவைப் பெறுவதில் பெரிதும் நாட்டம் கொண்ட மண்டேலா, லண்டன் மற்றும் தென்னாபிரிக்கா பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை மேற்கொண்டதோடு, 1941 ஆம் ஆண்டு ஜோகனஸ்பேர்க் சென்று சட்டக்கல்வி படித்தார். அத்தோடு ஒரு தங்கச் சுரங்க பாதுகாப்பு அதிகாரியாகவும், தோட்ட முகவராகவும் பணியாற்றி வந்தார்.

இனவெறி செயற்பாடுகளுக்கு எதிராக ஆரம்பத்தில் வன்முறையற்ற வழியில் போராடுவதில் அதிக நம்பிக்கை கொண்டிருந்த இவர், பின்னாளில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் இராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கினார். 

1960 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் திகதி. சார்ப்வெய்ல்லி நகரக் காவல்நிலையம் முன்பு 7 ஆயிரத்துக்கும் அதிகமான கறுப்பின மக்கள் கூடியிருந்தனர். குறித்த மக்களுக்கு எதிரே நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 69 பேர் இரக்கமின்றி கொல்லப்பட்டதோடு, 180 க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

அதுவரை அமைதி வழியில் போராடிய நெல்சன் மண்டேலா உள்ளிட்ட ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் போராளிகள், நிறவெறியை ஒழிப்பதற்கு ஆயுதம் ஏந்துவதைத் தவிர வேறு வழியே இல்லை என்ற தீர்மானத்தினை எடுப்பதற்கு காரணமாக அமைந்தது.

இதனால் மண்டேலாவைத் தேடத் தொடங்கிய தென்னாப்பிரிக்க வெள்ளை இன அரசு, அவரை கைது செய்து நீதிமன்றத்தின் முன் நிறுத்தியது.

வழக்கு விசாரணையில் தனது தரப்பு நியாயத்தை எடுத்துரைக்கும் விதமாக நெல்சன் மண்டேலா ஆற்றிய உரை வரலாற்று முக்கியத்துவம் பெற்றது. 

சுமார் மூன்று மணி நேரம் அவர் ஆற்றிய உரையில், நான் ஆப்பிரிக்க மக்களுக்காக போராடுவதற்காக என் வாழ் நாளை அர்ப்பணித்திருக்கிறேன். எவ்வாறு வெள்ளையின ஆதிக்கத்தை எதிர்க்கிறேனோ, அதே அளவு கறுப்பின ஆதிக்கத்தையும் எதிர்க்கிறேன். அனைத்து இன மக்களும் ஒருங்கிணைந்து பேதமில்லாமல் வாழும் ஒரு சமுதாயத்தை உருவாக்குவதே எனது நோக்கம் என்றார். 

இந்த நோக்கம் நிறைவேறுவதற்காக நான் உயிர் துறக்கவும் தயார் என்ற மண்டேலாவின் வாக்குமூலம் அவர் தரப்பு வழக்கறிஞர்களையே அதிர வைத்தது. 

இனவெறிக்கொள்கைக்கு எதிராக போராடியதால், 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர்.  க்ளாஸ் டீ பிரிவில் மண்டேலா 46664 என்ற சிறை எண்ணில் 7 அடி அறையில் அடைக்கப்பட்டார். 

அங்கு மாதம் ஒருமுறை மட்டுமே பார்வையாளர்களை காண முடியும், கடிதங்கள் அனுப்ப முடியும். அந்த கடிதங்களும் அதிகாரிகளால் தணிக்கைக்கு உட்படுத்தப்படும். சில நேரங்களில் செய்தித்தாள்களை திருடிப் படித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு அவருக்கு தண்டனையும் வழங்கப்பட்டது. 

சிறைவாசம் முடிந்து 1990 ஆம் ஆண்டு தனது 71 ஆவது வயதில் விடுதலையான அவர், காயங்களை ஆற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது என உரக்கச் சொன்னபோது, கூடியிருந்தவர்கள் கண்ணீருடன் அதை ஆமோதித்தார்கள். 

மக்களாட்சியின் மகத்துவத்தை உணர்த்தும் வகையிலான ஆட்சியைத் 1994 ஆம் ஆண்டுமுதல் 1999 ஆம் ஆண்டுவரை  தந்தார். 

மக்கள் செல்வாக்கு இருக்கும் நேரத்திலேயே ஆட்சியிலும், அரசியலிலும் இருந்தும் விலகி அடுத்த தலைமுறைக்கு வழிவிடும் அரசியல் நாகரிகத்தைக் கடைப்பிடித்தவர்.  

இனவெறி ஆட்சியில் ஊறிக்கிடந்த தென்னாபிரிக்காவை மக்களாட்சியின் மிளிர்வுக்கு இட்டுச் சென்றவர். அமைதிவழிப் போராளியாக, ஆயுதப் போராட்டத் தலைவனாக, தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளியாக, 27 ஆண்டுகள் சிறையில் வாடி பின்னர் விடுதலையாகி குடியரசு தலைவராக, அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவராக பரிணமித்த இவர், அரசியல் பயணத்தை 2008 ஆம் ஆண்டு முதல் நிறைவுக்கு கொண்டுவருவதாக அறிவித்தார். தொடர்ச்சியாக வந்த தென்னாபிரிக்க அரசின் ஆலோசகராக செயற்பட்டு வந்தார்.

உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8 ஆம் திகதி பிரிட்டோரியாவில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 2013 டிசம்பர் 5 ஆம் திகதி உயிர் துறந்தார்.

ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும், இனவெறியிலிருந்து மக்களை விடுவிப்பதற்காகவும் தமது வாழ்நாட்களை அர்பணித்த மண்டேலாவுக்கு நிம்மதியான வாழ்க்கை ஒருபோதும் வாய்க்கவில்லை. 

ஆனால், உலகம் முழுவதும் பல கோடி மக்கள் தன்னம்பிக்கையுடனும் அமைதியாகவும் வாழ்வதற்கு அவரது போராட்டம் நிறைந்த வாழ்க்கையும் ஒரு வித்து என்பது ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய விடயமாகும்.