ஹோமாகம நீதிவான் நீதிமன்றில் கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் திகதி  நீதவான் முன்னிலையில் நடந்து கொண்ட விதம் மற்றும் நீதி மன்றத்தை அவமதித்தமை போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில்  பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக தொடுக்கப்பட்டிருக்கும் வழக்கின் தீர்ப்பு  எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி வழங்கப்படும் என நீதி மன்றம் இன்று அறிவித்துள்ளது.

அப்போது ஹோமாகம நீதவானாக இருந்த ரங்க திஸாநாயக்கவால் ஞானசார தேரருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. 

வழக்கு விசாரணைகள் நிறைவடைந்துள்ள நிலையில் தீர்ப்பை எதிர்வரும் மாதம் 8ஆம் திகதி அறிவிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி ப்ரீதி பத்மன் சுரசேன மற்றும் சிரான் குணரத்ன ஆகியோரால்  தீர்ப்பு அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.