பெற்றோர்களும் அல்லது திருமணமான தம்பதிகள் அனைவரும் அவர்களின் மரபணுவை சோதனை செய்து கொள்ளவேண்டும். அத்துடன் அது சார்ந்த ஆலோசனையையும் பெறவேண்டும் என்று வைத்திய  நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள். மேலும் இது குறித்து விழிப்புணர்வும் மேம்படவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.

ஐந்து வயதிற்குட்பட்ட பிள்ளைகளின் இறப்பு ஆண்டுதோறும் 1.3 மில்லியன் என்ற கணக்கில் இருப்பதாக தெற்காசியாவிற்கான யுனிசெஃப் நிறுவனம் தன்னுடைய ஆய்வில் தெரிவித்திருக்கிறது. இதில் பத்து சதவீதத்தினர் மரபணு கோளாறுகளால் மரணத்தை எதிர்கொள்கின்றனர். முறையான மரபணு சோதனை மற்றும் ஆலோசனையைப் பெற்றிருந்தால் இவர்களின் மரணத்தை தடுத்திருக்கலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தெற்காசிய நாடுகளுக்கு மரபணு கோளாறு என்பது மிகப்பெரிய வைத்திய  சவாலாகவே இருக்கிறது. தற்போது ஆரோக்கிய சவாலுள்ள பிள்ளைகள் பிறப்பதும், ஐந்து வயதிற்குள் இருக்கின்ற பிள்ளைகள் மரணிப்பதும் தடுக்கப்படவேண்டும்.

திருமணத்திற்கு பிறகு தம்பதிகள் மகப்பேற்றிற்காக உளவியல் ஆலோசனையைப் பெறுவது போல் மரபணு சோதனையையும், மரபணு சார்ந்த ஆலோசனையையும் கட்டாயம் பெறவேண்டும். இதன் மூலம் மூன்று வகையான பாதிப்புகளுடன் குழந்தை பிறப்பதை தவிர்க்கலாம் மற்றும் தடுக்கலாம். Down Syndrome.Patau Syndrome & Edward Syndrome ஆகிய மூன்று நோய்குறிகளை இத்தகைய சோதனைகள் மற்றும் ஆலோசனைகளின் மூலம் தடுக்கலாம்.

மரபணுக்களில் கோளாறுகளோ அல்லது அசாதாரண நிகழ்வுகளோ ஏற்படாமல் இருப்பதற்கு சில வழிமுறைகளையும் நாம் உறுதியாக பின்பற்றவேண்டும்.

ஆரோக்கியமான உறக்கம்,  போஷாக்கான சரிசமவிகித உணவு, நாளாந்தம் உடற்பயிற்சி, நடைபயிற்சி மற்றும் யோகா ஆகியவற்றை முறையாக பின்பற்றவேண்டும். மன அழுத்தத்தால் உற்பத்தியாக கார்டிசோல் என்ற இரசாயனத்தின் அளவை நல்ல உறக்கம் குறைக்கிறது. அதே போல் மது அருந்துவதையும், புகைப்பிடிப்பதையும் தவிர்க்கவேண்டும்.