இந்திய அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் மொர்கன் மற்றும் ரூட்டுடைய துணையுடன் இங்கிலாந்து அணி 8  விக்கெட்டுக்களினால் அபார வெற்றியீட்டி தொடரை 2 : 1 என்ற கணக்கில் கைப்பற்றியதுடன் பழியையும் தீர்த்துக் கொண்டது.

அந்த வகையில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையான முதலாவது போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்றது. இதனையடுத்து இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 86 ஓட்டங்களினால் வெற்றியீட்டியது.

இந் நிலையில் தொடரானது 1 : 1 என்ற சம நிலையிலிருந்த நிலையில் தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் போட்டி இன்று இங்கிலாந்தின் ஹேடிங்லீட்ஸ் மைதானத்தில் ஆரம்பமானது. 

போட்டியில் நாணய  சுழற்சியில் வெற்றியீட்டிய இங்கிலாந்து அணி இந்திய அணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது இதற்கிணங்க துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 256 ஓட்டங்களை பெற்றது.

இதனையடுத்து 257 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ஜேம்ஸ் வின்ஸ் மற்றும் ஜோனி பிரிஸ்டோ ஜோடி இந்திய அணியின் பந்து வீச்சுக்களை துவம்சம் செய்ய ஆரம்பித்தது.

அதற்கிணங்க இந்திய அணியின் பந்து வீச்சாளர்களை வெளுத்து வாங்கிய பிரிஸ்டோ 13 பந்துகளில் அதிரடியாக துடுப்பெடுத்தாடி 7 நான்கு ஓட்டங்கள் அடங்களாக 30 ஓட்டங்கள‍ை பெற்றிருந்த வேளை 4.4 ஓவர்களில் சர்துல் தாக்கூருடைய பந்து வீச்சில் ரய்னாவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்து வெளியேறி இந்திய அணிக்கு நிம்மதியளித்தார்.

இருப்பினும் அந்த நிம்மதி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. காரணம் அடுத்து ஜேம்ஸ் வின்ஸும் ரூட்டும் இணைந்து இந்திய அணி பந்து வீச்சாளர்களின் பந்தினை பதம் பார்த்தனர். இதனால் இங்கிலாந்து அணியின் ஓட்ட எண்ணிக்கை வேகமாக குவிய ஆரம்பித்தது.

ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி 9.1 பந்தில் 74 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை தோனி ஒரு கைகளை மாத்திரம் பயன்படுத்தி அபாரமான முறையில் ஜேம்ஸ் வின்ஸை 27 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க வைத்தார். அதன் பின்னர் அணித் தலைவர் மொர்கன் களமிறங்கினார். 

20 ஓவர்கள் ஆகும் போது இங்கிலாந்து அணி இரண்டு விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 121 ஓட்டங்களை பெற்று வலுவான நிலையில் நிலைத்திருந்தது. அதன் பின்னர் 20 ஓவரிலேயே மொர்கன் அடுத்தடுத்து இரண்டு நான்கு ஓட்டங்களை விளாச ரூட், மொர்கன் ஜோடி 50 ஓட்டங்களை கடந்தது. 

இதனையடுத்து 24 ஓவரின் குல்தீப் யாதவ்வின் முதல் பந்தில் ஒரு நான்கு ஓட்டங்களை பெற்றுக் கொண்ட ரூட் அரை சதத்தை கடந்தார். இந்திய அணி, நிலைத்திருந்த இவர்களின் ஜோடியை பிரிப்பதற்கு பல வியூகம் வகுத்தனர் ஆனால் அவர்கள் வகுத்த வியூகங்களை ரூட்டும், மொர்கனும் உடைத்து எரிந்தனர்.

ரூட்டுடைய அரை சதத்தைத் தொடர்ந்து அணியின் தலைவர் மொர்கன் 58 பந்துகளில் அரை சதம் பெற்றார். இதனையடுத்து 29 ஓவர்களின் நிறைவில் இவர்களின் ஜோடி 100 ஓட்டங்களை கடந்தது. அதனைத் தொடர்ந்து 34 ஓவரின் ஆரம்பத்தில் ரூட் அடித்த நான்கு ஓட்டத்துடன் அணியின் ஓட்டம் 200 ஐ தொட்டது.

இறுதியாக 44.3 ஓவரில் ரூட் பாண்டியாவின் பந்துக்கு நான்கு ஓட்டங்களை விளாச சதமடித்ததுடன் இங்கிலாந்து அணியும் வெற்றி இலக்கினை இலகுவாக கடந்தது.

ரூட் 120 பந்துகளில் 10 நான்கு ஓட்டங்கள் அடங்களாக 100 ஓட்டங்களையும் மொர்கன் 108 பந்துகளில் ஒன்பது நான்கு ஓட்டங்கள் மற்றும் ஒரு ஆறு ஒட்டம் அடங்களாக 88 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற்றுக் கொண்டனர். 

போட்டியின் ஆட்டநாயகனாக 49 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுக்களை கைப்பற்றிய ரஷித் தெரிவாகியதுடன் தொடரின் ஆட்டநாயகனாக ஜோய் ரூட் தெரிவாகியமையும் குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட முதலாவது டெஸ்ட் தொடர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி இங்கிலாந்தின் எட்பெஸ்டோனில் ஆரம்பமாகவுள்ளது.