இலங்கையின் மனித உரிமை ஆணையகத்தின் தலைவர் தீபிக உடகமவிற்கு கொலைமிரட்டல் விடுக்கப்பட்டதை சிவில் சமூக பிரதிநிதிகள் கண்டித்துள்ளனர்.

தீபிக உடகமவிற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதை 37 சிவில் சமூக அமைப்புகளும் 170 தனிநபர்களும் கடுமையாக கண்டித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

இலங்கை மனித உரிமை ஆணையகத்தின் தலைவர் தீபிக உடகமவிற்கு எதிராக  கொலை மிரட்டல்,வன்முறைகள் மற்றும் பகைமையை தூண்டும் கருத்துக்கள் வெளியாகியுள்ளமை   குறித்து அதிர்ச்சியடைந்துள்ளோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தீபிக உடகமவிற்கு எதிரான அறிக்கைகள் குறித்து நாங்கள் ஆழ்ந்த கரிசனையையும், அச்சத்தையும் வெளியிடுவதுடன் அவரிற்கான எங்கள் உறுதியான ஆதரவை தெரிவிக்கின்றோம் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தீபிகஉடகமவின் தலைமைத்துவத்தின்  கீழ் இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு மேற்கொண்டுள்ள வெளிப்படையான,குறிப்பிடத்தக்க, சுயாதீன. கொள்கை தலையீடுகளை நாங்கள் வரவேற்கின்றோம் எனவும் சிவில் சமூகத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஐக்கியநாடுகள் அமைதிப்படைக்கு அனுப்பப்படும் படையினரின் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராயும்ந நடவடிக்கையை இலங்கை மனித உரிமை ஆணையகம் மேற்கொண்டுள்ளது இதன் காரணமாகவே தீபிக உடகமவிற்கு எதிராக மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது  என சிவில் சமூக அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இது இலங்கை மனித உரிமை ஆணையகத்திற்கு வழங்கப்பட்ட ஆணை எனவும் குறிப்பிட்டுள்ள சிவில் சமூக அமைப்புகள் மரண அச்சுறுத்தலிற்கு மத்தியிலும் துணிச்சலாக தங்களது பணியை முன்னெடுப்பதற்காக ஆணையகத்தை பாராட்டியுள்ளன.

தீபிக உடகமவிற்கு எதிராக முன்னாள்  படை அதிகாரி சரத்வீரசேகர அச்சுறுத்தலை விடுத்துள்ளார் மவ்பிம அதனை வெளியிட்டுள்ளது, இந்த அச்சுறுத்தல் இலங்கை இராணுவத்தின் சம்மதத்துடன்  இலங்கை இராணுவத்தினர் முன்னெடுத்துள்ள ஐக்கியநாடுகள் அமைதிப்படைக்கு அனுப்பப்படும் படையினரின் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராயும் நடவடிக்கை தொடர்பானது எனவும் சிவில சமூக அமைப்புகள் தெரிவித்துள்ளன.

விடுதலைப்புலிகள் அமைப்பின் நலன்களை முன்னெடுப்பதற்காக உடகம  அரசசார்ப்பற்ற அமைப்புகளுடன் சேர்ந்து பணியாற்றுகின்றார் என சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்,தேசப்பற்றுள்ள அரசாங்கத்தின்  கீழ் துரோகிகள் அனைவருக்கும் மரணதண்டனை வழங்கப்படவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார் என அவை சுட்டிக்காட்டியுள்ளன.