தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், யாழ்.மாநகர சபை எதிர்க்கட்சி உறுப்பினருமான வி.மணிவண்ணனுக்கு எதிரான வழக்கு விசாரணையை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 03 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக யாழ். நீதிமன்றம் அறிவித்துள்ளது.

யாழ்.மாநகர சபை எதிர்க்கட்சி உறுப்பினரான வி.மணிவண்ணன், மாநகர சபை எல்லைக்குள் வசிக்காத காரணத்தால், சபை அமர்வுகளில் பங்கேற்பதற்கும், வாக்களிப்பதற்கும் இடைக்கால தடையுத்தரவை விதிக்க வேண்டும் என மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந் நிலையில் குறித்த மனு மீதான விசாரணை இன்றைய தினம் யாழ். நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன்போது மனுதாரர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி விண்ணப்பம் செய்தார். அதனை தொடர்ந்து எதிர்மனுதாரான மணிவண்ணன் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் ஆட்சேபனைகளை முன்வைக்க உள்ளதால் தமக்கு கால அவகாசம் வேண்டும் என விண்ணப்பம் செய்தனர். 

இரு தரப்பினரின் விண்ணப்பங்களை ஆராய்ந்த யாழ். மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான பத்மன் சூரசேன அர்ஜூன உபயசேகர ஆகியோர் வழக்கு விசாரணைகளை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 03 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தனர்.