தமது நலன்களை முன்னிலைப்படுத்தி போட்டித்தன்மையாக சவால் விடும் செயற்பாடுகளைத் தவிர்த்துக்கொண்டு அனைவரும் ஒற்றுமையாக ஒன்றுபட்ட கூட்டமைப்பாக தொடர்ந்தும் செயற்படுவதே சிறந்தது. குறிப்பாக பகிரங்க கருத்துக்களை ஊடகங்கள் வாயிலாகவும் பொதுவான இடங்களிலும் வெளியிடுவதை அனைவரும் நிறுத்திக்கொண்டாலே பிரச்சினைகளுக்கு சுமுகமான தீர்வுகளைக் காண்டுவிட முடியும் எனக் கருதுவதாக இலங்கைக்கு வருகைதந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரித்தானியக் கிளையின் தலைவர் சொலிசிஸ்டர் ஆர்.டி.இரத்தினசிங்கம் வீரகேசரிக்கு வழங்கிய தனது செவ்வியில் தெரிவித்தார்.

இலங்கைக்கு வருகைதந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரித்தானியக் கிளையின் தலைவர் சொலிசிஸ்டர் ஆர்.டி.இரத்தினசிங்கம் சமகால கூட்டமைப்பின் சமகால செயற்பாடுள்,  எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஆகியோரின் நிலைப்பாடுகள் உள்ளிட்ட தமிழ்த் தேசிய அரசியல் சார்ந்த முக்கிய விடயங்கள் குறித்து வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியின் முழுவடிவம் வருமாறு,

கேள்வி:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரித்தானியக் கிளையினுடைய செயற்பாடுகள் என்னவாகவுள்ளன?

பதில்:- எமது தலைமைக்கிளையின் செயற்பாடுகள், அவைதொடர்பான தெளிவுபடுத்தல்கள் போன்றவற்றை பிரித்தானியாவில் மேற்கொள்கின்றோம். அத்துடன் தாயகத்தில் கட்சியின் செயற்பாடுகளுக்கு எம்மாலான ஒத்துழைப்புக்களை நல்கிக்கொண்டிருக்கின்றோம்.

கேள்வி:- வடக்குமுதல்வரின் “நீதியரசர் பேசுகின்றார்” நூல்வெளியீட்டில் தாங்களும் விருந்தினராக பங்கேற்றிருந்தாலும் கூட்டமைப்பின் ஒற்றுமையை மையப்படுத்திய செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக அறியமுடிகின்றது. அதுபற்றி கூறமுடியுமா?

பதில்:- ஆம், திருவாளர் சம்பந்தன் மற்றும் விக்கினேஸ்வரன் ஆகியோர் ஒரே மேடையில் சந்திப்பதன் ஊடாக பல்வேறு பிரச்சினையான விடயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பது எமது கணிப்பாக இருந்தது. அதன் ஒருஅங்கமாக நூல்வெளியீட்டு விழா ஏற்பாடு செயற்ப்பட்டது. இருவரையும் ஒருமேடையில் பிரசன்னமாகச் செய்வதற்கான முயற்சியும் வெற்றிபெற்றது.

நூல்வெளியீட்டு விழாவின் பின்னர் சம்பந்தன், விக்கினேஸ்வரன், மாவை.சேனாதிராஜா, அருட்தந்தை இம்மானுவேல் மற்றும் நான் உள்ளிட்டவார்கள் ஒன்றாக இருந்து கலந்துரையாடியவாறே மதியபோசனத்தினை நிறைவு செய்திருந்தோம். அதன்போது ஒற்றுமையாக இருக்கவேண்டியது பற்றி அதிகமாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. அருட்தந்தை இம்மானுவேல் அதுபற்றி கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.

இந்த சந்திப்பைக் கூட சிலர் விரும்பியிருக்கவில்லை. குறுகிய வட்டத்திற்குள் உள்ளவர்கள் இவ்வாறான முயற்சி வேண்டாதவொரு முயற்சி என்றே கருதுகின்றார்கள். இருப்பினும் பொதுமக்கள் மத்தியில் இந்த முயற்சிக்கு பெருவரவேற்பு இருந்தது. அதேபோன்று புலம்பெயர்ந்த சொந்தங்களும் வரவேற்றுள்ளனர். எதிர்காலத்திலும் இத்தகைய செயற்பாடுகளை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம்.

கேள்வி:- வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தொடர்பில் தாங்கள் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுடன் பேச்சுக்களை நடத்தினீர்களா? அவருடைய நிலைப்பாடு எவ்வாறுள்ளது?

பதில்:- தற்போதுள்ள சூழலில் எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளார் யார் என்பது தொடர்பில் திருவாளர் சம்பந்தனுடன் பேச்சுக்களை நடத்தியிருந்தேன். அந்த விடயம் குறித்து முடிவெடுப்பதற்கு இன்னமும் காலம் உள்ளது என்றே என்னிடத்தில் குறிப்பிட்டார். அதனைவிடவும் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தொடர்பில் பாரிய குற்றச்சாட்டுக்கள் எதனையும் அவர் முன்வைக்கவில்லை. 

தேர்தல்காலத்தில் அவர் ஒதுங்கியிருந்தமை மற்றும் வடமாகாண அபிவிருத்தி விடயங்களில் மேலும் பலவற்றை செய்திருக்க முடியும் ஆகியன தொடர்பிலேயே தலைவரிடத்தில் மனக்குறைகள் காணப்படுகின்றன. இந்த விடயங்களைப் பொறுத்தவரையில் முதலமைச்சர் ஆகக்குறைந்தது 2015ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின் இறுதி பிரசாரக் கூட்டத்திலாவது பங்கேற்றிருந்திருந்தால் இவ்வளவு தூரம் நிலைமைகள் மோசமடைந்திருக்காது என்பதோடு கட்சிக்குள்ளே இருந்துகொண்டே பேச்சுக்களை நடத்தி தீர்வுகளை எடுத்திருக்கலாம் அந்த விடயத்தில் குறைபாடான நிலையொன்று ஏற்பட்டு விட்டது என்பதே எனது நிலைப்பாடாகவும் உள்ளது.

கேள்வி:- நீங்கள் வடமாகாண முதலமைச்சருடன் நடத்திய சந்திப்பின் போது அவருடைய நிலைப்பாடு எவ்வாறு இருக்கின்றது?

பதில்:- வடமாகாண முதலமைச்சரைப் பொறுத்தவரையில் திருவாளர் சம்பந்தனுக்கு எதிராக தான் ஒருபோதும் செயற்படமாட்டேன் என்றும் மக்களிடத்தில் தன்னால் பொய்கூறமுடியாது என்றும் திட்டவட்டமாக கூறுகின்றார். இந்த இரண்டு விடயங்களில் உறுதியாக இருப்பதன் காரணமாகவே பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் அதனைவிட தனிப்பட்ட ரீதியில் தனக்கும் ஏனையவர்களுக்கும் இடையில் கோபதாபங்கள் எவையும் இல்லை என்றும் முதலமைச்சர் குறிப்பிடுகின்றார்.

கேள்வி;- கூட்டமைப்பினுள் கட்டமைக்கப்பட்ட அமைப்புமுறைமையொன்று காணப்படாததன் காரணத்தினாலே பல்வேறு பிரச்சினைகள் எழுவதாக விமர்ச்சிக்கப்படுகின்றதே?

பதில்:- அமிர்தலிங்கம் தலைமை வகித்த காலத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் கட்சிக்கான பல கிளைகள் காணப்படும். ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் பொதுச்சபைக்கு இரண்டு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். இந்த உறுப்பினாகளுடன் தொழிற்சங்க அங்கத்தவர்கள், இளைஞர், மகளிர் அங்கத்தவர்கள் என அனைவரையும் உள்ளடக்கியே பொதுச்சபை அமைக்கப்படும். அதன் பின்னர் பொதுச்சபையிலிருந்து செயற்குழு, மத்தியகுழு ஆகியவற்றுக்கான அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். இதனைவிடவும் முக்கிய தீர்மானங்களை கட்சி சார்ந்து எடுகின்றபோது நிபுணத்துவ ஆலோசனைக்குழுவின் பரிந்துரைகளும் கவனத்தில் கொள்ளப்படுவதுண்டு. இவ்வாறான கட்டமைப்புக்கள் முறையாக இல்லாததன் காரணமாகவே கட்சிக்குள் பிரச்சினைகள் எழுகின்றன. தமிழ்த் தேசியக்கூட்டமைப்பிற்குள்ளும் பிரச்சினைகள் எழுகின்றன.

இதனைவிடவும் கூட்டமைப்பினுள் இருக்கும் கட்சிகள் இணைவதற்கு வருகின்ற தரப்பினர் அனைத்தும் தேர்தல்களுக்கான கோட்டாக்களை வைத்திருக்கின்றார்கள். நபர்களை முன்நிலைப்படுத்துகின்றார்கள்.

இதன் காரணமாக ஒருதரப்பினர் மீது மற்றொரு தரப்பினர் பரஸ்பர குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்ற நிலைமைகள் எழுகின்றன. இவ்வாறான நிலைமைகள் கைவிடப்பட வேண்டும். தமிழர் விடுதலைக்கூட்டணி உருவாக்கப்பட்டகாலத்தில் தமிழரசுக்கட்சி, தமிழ்க்காங்கிரஸ் என்பன எவ்வாறு இணைந்து செயற்பட்டதோ அதுபோன்று மக்கள் நலனை மையப்படுத்தி அனைவரும் ஒன்றுபடவேண்டும். கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவர்களும் மீண்டும் இணைந்து வலுவான அமைப்பாக உருவாகுவது தொடர்பில் சிந்திக்க வேண்டும். நபர்கள் பிரச்சினைக்குரியவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் மீது கட்சி சார்ந்து ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்க முடியும். இவ்வாறு ஒற்றுமையான கட்டமைப்பினை  தமிழர்களுக்குள் ஏற்படுத்தாது பெரும்பான்மையினரான சிங்களவர்களுடன் ஒற்றுமையாக இருப்பது பற்றி பேச்சுவார்த்தைக்குச் செல்வது அருகதையற்ற செயலாகும்.

அதேநேரம் பாராளுமன்றத்தில் இளம் பாராளுமன்ற உறுப்பினர்களை விவாதங்களின்போது அமர்ந்திருப்பதையே காணமுடியாதுள்ளது. சம்பந்தன் இத்தனை முதுமையிலும் சபையில் அமர்ந்திருக்கின்றபோதும் ஏனையவர்கள் அதிகமாக சபைக்கு பிரவேசித்து சொற்பகாலத்திலேயே வெளியேறிவிடுகின்றார்கள். இது ஆரோக்கியமானதல்ல. அத்துடன் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களில் கணிசமானவர்கள் சட்டத்தரணிகளாக இருந்து வந்தார்கள். துற்போது அதில் குறைபாடு காணப்படுகின்றது. பாராளுமன்றம் சட்டவாக்க கழகமாக இருக்கின்றபோது நிச்சயமாக சட்டத்துறை சார்ந்தவர்களும் கணிசமாக இருக்க வேண்டியதாகின்றது. அதற்காக ஏனையவர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது என நான் கூறவில்லை.

கேள்வி:- தற்போதைய அரசியல் சூழலில் ஆட்சியாளர்கள் தமிழ்மக்கள் தொடர்பில் கரிசனை கொள்வார்கள் என்ற நம்பிக்கையைக் கொண்டிருக்கின்றீர்களா?

பதில்:- திருவாளர் சம்பந்தனைப் பொறுத்தவரையில் நாங்கள் நம்பாதிருந்தால் மற்றவர்களை நம்பவைக்க முடியாது என்ற கோட்பாட்டின் பிரகாரம் தான் பல்வேறு விடயங்களில் நம்பிக்கையுடான பங்களிப்புக்களை ஆட்சியாளர்களுக்கு வழங்க ஆரம்பித்திருந்தார். தற்போதைய சூழலில் அவருடைய நம்பிக்கையும் தளர்ந்துகொண்டு தான் போகின்றது. இருப்பினும் எடுக்கப்பட்ட முயற்சிகளை கைவிடாது இறுதிவரையில் ஈடுபட வேண்டும் என்றே கருதுகின்றார்.

அண்மையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிரணியில் அமர்ந்ததன் பின்னர் மக்கள் மத்தியில் புதிய அரசியல் யாப்பு உள்ளிட்ட அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மீது நம்பிக்கையற்ற நிலை ஏற்பட்டுள்ளது. சமகால நிலைமைகளின் பிரகாரம் ஏதாவது அதிசயம் நிகழ்ந்து புதிய அரசியலமைப்பு உருவாகுவதற்கு வாய்ப்புக்கள் இருக்கின்றவே தவிரவும் சதாரண நிலையில் அது சாத்தியமாகாத தோற்றப்பாடு தான் உள்ளது.

புதிய அரசியலமைப்பு விடயம் என்பதை விடவும் ஆகக்குறைந்தது முதற்கட்டமாக 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று அதிகாரங்களை பகிர்வதன் ஊடாக பிரச்சினைகளுக்கான தீர்வினை முதற்கட்டமாக பெற்றுக்கொள்ள முடியும். அதற்கான உந்துதல்களையும் மேற்கொள்ள வேண்டும். அதேநேரம் புதிய அரசியலமைப்பினை மையப்படுத்தியே கடந்த வரவு செலவுத்திட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. வெறுமனே அந்தவொரு விடயத்தினை முன்வைக்காது அடுத்துவரும் காலப்பகுதிகளில் நன்மை பயக்கும் திட்டங்களை இறுக்கமாக மையப்படுத்தியே ஆதரவினை நல்கவேண்டும்.

மேலும் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் தமிழக முதலமைச்சராக இருந்த கருணாநிதி மத்தியில் ஆட்சிபுரிந்த காங்கிரஸுக்கு சார்பாக நடந்தமையினாலேயே யுத்தநிறுத்தம் செய்யமுடியாது எல்லையற்ற பாதிப்புக்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்ததாக குற்றம் சுமத்தப்படுகின்றது.

அவ்வாறான நிலையில் இறுக்கமான நிபந்தனைகள் இன்றி வரவு செலவுத்திட்டத்திற்கு கூட்டமைப்பு ஆதரவினை தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் செயற்பாட்டால் எதிர்கால சந்ததியின் குற்றச்சாட்டுக்கு இலக்காகும் ஆபத்தான நிலைமையே ஏற்படும். 

கேள்வி:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்த் தேசியத்தின் அடிப்படையில் இருந்து விலகி பயணிப்பதாக கடுமையாக விமர்சிக்கப்படுவது பற்றி?

பதில்:- 1926 ஆம் ஆண்டு கண்டிமாநாட்டில் பண்டாரநாயக்க சமஷ்டி முறையிலான ஆட்சிமுறை உருவாக்கப்பட வேண்டும் என்று விரும்பினார். அச்சமயத்தில் சேர்.பொன்.இராமநாதன்  போன்றவர்கள் அதனை ஆதரித்திருக்கவில்லை. ஆதற்கு பின்னர் 50க்கு 50 கோரப்பட்டபோதும் அது சாத்தியமாகவி;ல்லை. பின்னர் தந்தை செல்வா முற்போக்கான சிந்தனையுடன் சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்தார். எனினும் அதன் பின்னரான காலப்பகுதியில் பெரும்பான்மை ஆட்சியாளர்கள் சமஷ்டி கோரிக்கையிலிருந்து படிப்படியாக குறைத்து ஒருகட்டத்தில் மாவட்ட சபைக்கான முன்மொழிவு கூட ஏற்பட்டது.

அதற்குப் பின்னரான காலத்தில் நீலன் திருச்செல்வம் “பிராந்தியங்களின் ஒன்றியம்”  என்ற முன்மொழிவைச் செய்தார். 13 இற்கும் அதிகமாக இருந்த அதிகாரப்பகிர்வான பிராந்தியங்களின் ஒன்றியம் என்ற பரிந்துரையை பெற்றுக்கொள்ள முடியாது போனது.

அதேநேரம் போராளிகளால் தமிழீழக் கோரிக்கை முன்வைக்கப்பட்டபோது ஆட்சியாளர்கள் தமிழத்திற்கு அடுத்தபடியானதை வழங்க தயார் என்றே கூறினார்கள். இப்படி வரலாற்றினைப் பார்க்கின்றபோது தமிழர் தரப்பினால் அதியுச்சமாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டாலும் அவை படிப்படியாக குறைக்கப்பட்டு தற்போது எதுமில்லாத நிலையில் தான் இருக்கின்றோம்.

ஆகவே எமது தற்போதைய நிலைமைகளை நன்கு உணர்ந்து கொண்டு அரசியலுக்கான செற்பிரயோகங்களில் தங்கியிருக்காது நடைமுறைச்சாத்தியமான வகையில் அதிகாரங்களைப் பகிர்ந்துகொண்டு எமது எதிர்கால நகர்வுகளை திட்டமிட்டு முன்னெடுப்பதே எம்மினத்தின் இருப்பை பாதுகாத்து பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைவதற்கு வழியமைப்பதாக இருக்கும்.

கேள்வி:- வடக்கு முதல்வர்  மாகாணசபையை வினைத்திறனாக கொண்டு நகர்த்தவில்லை என்று கடும் விமர்ச்சனத்துக்குள்ளக்கப்படுகின்ற நிலையில் உங்களுடைய பார்வை எவ்வாறுள்ளது?

பதில்:- வடகிழக்கு மாகாண சபை இரண்டாக பிரிக்கப்பட்டதன் பின்னர் 2013இல் வடக்கு மாகாணசபைக்கான முதலாவது தேர்தல் நடத்தப்பட்டபோது சம்பந்தனே விக்கினேஸ்வரனை வேட்பளராக கொண்டுவருவதற்கு கடும்முயற்சிகளை எடுத்தார். முதலிரு கூட்டங்களில் பங்காளிக்கட்சிகள் எதிர்த்தபோதும் பின்னர் சம்பந்தனின் நியாயப்படுத்தல்களின் பிரகாரமே அவர் களமிறக்கப்பட்டு வெற்றிபெற்று முதலமைச்சரானார்.

வெளிநாட்டு பிரதிநிதிகள், தூதுவர்கள், இராஜதந்திரிகள் என எவர் இலங்கைக்கு வருகை தந்தாலும் தமிழர்களின் தாயம் யாழ்ப்பாணம் என்ற நிலைப்பாட்டில் அங்கு விஜயங்களை செய்கின்றார்கள்.அங்கு செல்லும் அனைவரும் முதலமைச்சரை சந்திக்க ஆரம்பித்தார்கள்.

இவ்வாறான நிலைமையால் அவரும் தேசிய அரசியல் பேச வேண்டிய சூழலுக்குள் நிர்ப்பந்திக்கப்பட்டார். குறிப்பாக வடமாகாணத்தில் தங்கியிருப்பதால் களநிலைமைகளை நன்கறிந்தவராக கருதப்பட்டார். அதனால் உரிமைக்காக, நீதிக்காக எதிர்பார்த்திருக்கும் மக்களின் குரலாக(பேச்சாளராக) மாறவேண்டியேற்றபட்டது. அதுவே முதலமைச்சர் விரும்பியோ விரும்பாமலோ அதிகமாக அரசியல் சார்ந்த கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு தள்ளிவிட்டது.

விசேடமாக வடக்குக்கு செல்லும் வெளிநாட்டு தரப்பினரிடத்திலும் சரி உள்நாட்டு அரசியல் தரப்பினருக்கும் சரி ஒளிவுமறைவின்றி விடயங்களை முதல்வர் முன்வைத்தார். இதனால் பாராளுமன்றத்தில் நடைமுறைச்சாத்தியமான அரசியல்நகர்வுகளைச் செய்தவர்களுக்கும் முதலமைச்சருக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்படுவதற்கும் காரணமாக அமைந்து விட்டது.

அந்த முரண்பாடுகள் கொள்கை ரீதியானவை என்பதையும் கடந்து தனிப்பட்ட நபர்களுக்கு இடையிலானவையாக பரிநாமம் பெறுமளவிற்கு நிலைமைகள் ஏற்பட்டு விட்டன. இந்த விடயத்தினை உணர்ந்துகொள்வார்களாயின் இத்தனை பிரச்சினைகளுக்கும் விரைவில் முற்றுப்புள்ளி ஏற்பட்டுவிடும்.

கேள்வி:- உங்களுடைய பார்வையில் விக்கினேஸ்வரன் மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு முதலமைச்;சர் வேட்பாளராக களமிறக்கப்படுவாரா?

பதில்:- வடக்கு முதலமைச்சருக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்து அவருக்கு சவால் விடுக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவது உடன் நிறுத்தப்பட வேண்டும். காரணம் சாவால்கள் முன்வைக்கப்படும்போது அதனை எதிர்கொண்டு பார்ப்போம் என்பது தான் மனித சுபாபமாகவுள்ளது. ஆகவே சவால், கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றபோது முதலமைச்சருக்கு கூட அதற்கு முகங்கொடுத்துப்பார்ப்போம் என்ற மனோநிலை வருவது இயல்பானதே.

அதேநேரம் வடமாகாண முதலமைச்சருக்கும் குறிப்பிடத்தக்க அளவு ஆதரவுள்ளது. அவரது இடத்தினை நிரப்புவதென்றால் அவர் போன்றதொரு கட்டமைப்புடையவராலேயே முடியும். அத்தகையதொருவர் இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கு இல்லாத பட்சத்தில் அது இலங்கை தமிழரசுக் கட்சிக்கு பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்துவதாகவே இருக்கும். அத்துடன் தமிழ் மக்களின் வாக்குகளும் பிளவுபட்டு விடுவதால் தமிழர்களின் பேரம்பேசும் சக்தியும் வலுக்குறைந்ததாகிவிடும்.

இந்த விடயத்துடன் தொடர்புபட்டுள்ளவர்கள் தமது நலன்களை முன்னிலைப்படுத்தி போட்டித்தன்மையாக சவால் விடும் செயற்பாடுகளைத் தவிர்த்துக்கொண்டு அனைவரும் ஒற்றுமையாக ஒன்றுபட்ட கூட்டமைப்பாக தொடர்ந்தும் செயற்படுவதே சிறந்தது. குறிப்பாக பகிரங்க கருத்துக்களை ஊடகங்கள் வாயிலாகவும் பொதுவான இடங்களிலும் வெளியிடுவதை அனைவரும் நிறுத்திக்கொண்டாலே பிரச்சினைகளுக்கு சுமுகமான தீர்வுகளைக் காண்டுவிட முடியும் எனக் கருதுகின்றேன்.

( நேர்காணல் ஆர்.ராம் )