(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி )

இலங்கை - சிங்கப்பூர் பொருளாதார உடன்படிக்கையில் குறைபாடுகள், நெருக்கடிகள் இருப்பின் அவற்றினை சரி செய்து கொண்டு உடன்படிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். 

சிங்கபூர் - இலங்கைக்கிடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை குறித்து பொது எதிரணியின் தலைவர் தினேஷ் குணவர்தன கொண்டவந்த சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போது உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார். 

அவர் இது தொடர்பில் மேலும் கூறுகையில், 

இலங்கை அரசாங்கம் சிங்கப்பூருடனான இந்த உடன்படிக்கைகளை செய்யும் பொது முரண்பாடுகள் நெருக்கடிகள் இருப்பின் அரசாங்கம்  அவற்றில் திருத்தங்கள் செய்து, ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தி அதன் மூலமாக நாட்டுக்கு நன்மைகளை கொண்டுவர வேண்டும். 

அத்துடன் அவர்கள் எமக்கு கொடுக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்த வேண்டும் என்பதுடன் எமது வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும். இனியும் நாம் பின்னோக்கி செல்லக் கூடாது. இந்த நிலைமைகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். 

மேலும் எட்கா  போன்ற உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன. அதில் தடைகளும் இருந்தன. ஆனால் இவற்றை கருத்தில் கொண்டால் நாம் முன்னேற முடியாது. நாம் மிகவும் பின்தங்கி நிற்கும்  நபர்கள். ஆகவே இந்த உடன்படிக்கைகளை முன்னெடுக்க எமக்கு தேவை உள்ளது. ஏனைய நாடுகளுடன்  ஒன்றிணைந்து அதன் மூலமாக எமக்கு நன்மை பயக்கும் வகையில் செயற்பட வேண்டும். அந்த நம்பிக்கை எமக்கு வர வேண்டும். வீணாக அச்சம் கொண்டு உடன்படிக்கைகளை கைவிடக் கூடாது. 

தைரியமாக இந்த ஒப்பந்தங்களை முன்னெடுத்து நாட்டை அபிவிருத்தியின் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.