அமெரிக்கா, கனாஸ்சிட்டியில் உள்ள மசோரி பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்த இந்திய மாணவனை கொலை செய்த கொலையாளியை அமெரிக்க பொலிஸார் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.

இந்தியாவின் தெலுங்கான மாநிலத்தைச் சேர்ந்த 25 வயதுடைய சரத் கொப்பு மசோரி பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பினை கற்றுக்கொண்டு அப் பகுதியிலுள்ள ஹோட்டலொன்றில் பகுதி நேரமாக பணியாற்றி வந்தார்.

இந் நிலையில் கடந்த 6 ஆம் திகதி மாலை சரத் கொப்பு ஹோட்டலில் பணியாற்றிக் கொண்டிருந்த போது ஹோட்டலுக்குள் புகுந்த அடையாளம் தெரியாதோர் ஹோட்டலுக்கு வந்தவர்களிடம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதுடன் சரத் கொப்புவை  துப்பாக்கியால் சுட்டு தப்பித்து விட்டனர்.

இதனையடுத் காயமடைந்த சரத் கொப்பு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இது குறித்து விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், ஹோட்டலில் உள்ள சி.சி.டிவி கமராவின் காணொளிகளை அடிப்படையாக கொண்டு குற்றவாளிகளை அடையாளம் கண்டு கொண்டனர்.

இந் நிலையில் நேற்றுமுன்தினம் சந்தேக நபரை கைதுசெய்யும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டபோது அவர் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்ப முயன்றுள்ளார்.

பின்னர் பதில் தாக்குதலை மேற்கொண்ட பொலிஸாரின் துப்பாக்கி தாக்குதலில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதுடன் மூன்று பொலிஸாரும் காயடைந்துள்ளனர்.

இது குறித்து கனாஸ்சிட்டி பொலிஸார் கூறுகையில், 

கனாஸ்சிட்டி ஹோட்டலில் இந்திய மாணவரைச் சுட்டுக்கொன்றதாக சந்தேகிக்கப்படும் இளைஞரைக் கண்டுபிடித்து அவரை காரில்  துரத்திச் சென்று கைதுசெய்ய முயன்றோம். ஆனால், அவர்‍ பொலிஸாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றதுடன் பொலிஸார் மீதும் துப்பாக்கி சூடு மேற்கொண்டார். இதன் காரணமாகவே அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டோம் என்றனர்.