(இராஜதுரை ஹஷான்)

ஐரோப்பிய ஒன்றியம் அல்ல முழு உலகமே எதிர்த்தாலும் மரண தண்டனையை நிறைவேற்றுவோம். இவ் விடயத்தில் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம் என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

போதைப் பொருள் குற்றங்களுக்காக மரண தண்டனை விதிப்பது தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட மேற்குல நாடுகள் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளதுடன் ஐரோப்பிய ஒன்றியம் மரண தண்டனையை அமுல்படுத்தினால் பொருளாதார தடைகளை விதிப்பதாக குறிப்பிட்டுள்ளது.

போதைப்பொருள் பாவனையை அழிப்பதற்கு கடந்த காலங்களில் பாரிய முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டது. இதன் ஒரு கட்டமாகவே இந்த மரண தண்டனை காணப்படுகின்றது. நீதித்துறையினால் குற்றவாளிகளாக கருதப்பட்டு மரண தண்டனை அனுபவித்து வரும் கைதிகளுக்கு மரண தண்டனையை வழங்குவது எவ்வித மனித உரிமை மீறல் செயற்பாடாகாது என்பதை மேற்குலக நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் புரிந்துகொள்ள வேண்டும்.

அத்துடன் எமது நாட்டில் முக்கிய சட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது அதற்கு எதிராக மேற்குலக நாடுகள் அழுத்தங்களை பிரயோகிப்பது ஏற்றுக் கொள்ள முடியாது.

அத்துடன் ஜனாதிபதியின் இந்த தீர்மானத்துக்கு நாட்டு மக்களும், பெளத்த மதத் தலைவர்களும், அரசியல்வாதிகளும் ஆதரவு வழங்கியுள்ளனர். ஆகவே அரசாங்கம் நாட்டு மக்களின் விருப்பங்களுக்கு அமைய செயற்பட  வேண்டுமே தவிர சர்வசே நாடுகளின் விருப்பத்திற்கு அல்ல என்றார்.