குருணாகல் பொலிஸ் நிலையத்தில் மோதலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட ஆறு மாணவிகளையும் தலா ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யுமாறு குருணாகல் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

முறைப்பாடு ஒன்றினை விசாரிப்பதற்காக பொலிஸ் நிலையத்திற்கு வந்த ஆறு பேர் பொலிஸ் நிலையத்தினுள் வைத்து மோதலில் ஈடுபட்டுள்ள சம்பவம் குருணாகல் பொலிஸ் நிலையத்தினுள் இடம்பெற்றுள்ளது.

முகப்புத்தக்கத்தில் ஆபாசமான புகைப்படகள்  மற்றும் ஆபாசமான  வார்த்தைகளை பதிவேற்றுதல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கிணங்கவே இவர்கள் விசாரணைக்காக குருணாகல் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

இதன்போது குறித்த ஆறு பேருக்குமிடையில் மேற்படி மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து பெரும் சிரமத்துக்கு மத்தியில் மோதலை கட்டுப்படுத்திய பொலிஸார் குறித்த அறுவரையும் கைதுசெய்தனர்.

இதன் பின்னர் கைதுசெய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்களை இன்று குருணாகல் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது நீதிவான் அவர்களை தலா ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் விதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.