உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் பலரதும் கவனத்தை ஈர்த்த இரு தலைவர்கள் 

Published By: Priyatharshan

17 Jul, 2018 | 12:37 PM
image

நடைபெற்று முடிந்த உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிப்போட்டியில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரான் மற்றும் குரோசியாவின் ஜனாதிபதி கொலின்டா கிறபர் ஆகிய இரு நாட்டுத் தலைவர்களின் செயற்பாடுகளும் பலரையும் பேச வைத்துள்ளது.

உலகக்கிண்ண கால்பந்தாட்டத்தின் இறுதித் தருணங்களை எவரும் தமது சமூகவலைத்தளங்களில் பதிவிட்டதைவிட இவர்கள் இருவரின் செயற்பாடுகளையுமே பதிவிட்டதைக் காணக் கூடியதாகவிருந்தது.

உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் கிண்ணத்தை சவீகரித்த பிரான்ஸ் அணியின் வெற்றிக் கொண்டாட்டததை அந்நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரான் வீரர்களுடன் மழையில் நனைந்தவாறு மிகவும் ஆவேசத்துடனும் பரபரப்பாகவும் கொண்டாடினார். 

கடந்த ஞாயிற்றுக்கிழமை ரஷ்யாவில் இடம்பெற்ற உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் எவருமே எதிர்பார்க்காத வகையில் குரோசியா மற்றும் பிரான்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்து பலப்பரீட்சை மேற்கொண்டன. இதில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று கிண்ணத்தை சுவீகரித்தது.

இந்நிலையில் லீக் சுற்று ஆட்டங்களில் பிரான்ஸ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், அரையிறுதிப் போட்டியை காண்பதற்காக பிரான்ஸ் நாட்டின்  ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரான் ரஷ்யாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். அங்கு சென்று வீரர்களை உற்சாகப்படுத்திய பிரான்ஸ் ஜனாதிபதி, இறுதிப்போட்டியில் அவரது மனைவியுடன்  அரங்கிற்கு சென்றிருந்தார்.

இந்நிலையில் பிரான்ஸ் அணி போட்ட ஒவ்வொரு கோல்களுக்கும் அவரது செயற்பாடுகள் அனைவரையும் திரும்பிப்பார்க்கும் படியாக அமைந்திருந்தது.

இறுதியில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்ற நிலையில் அவர் அமர்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்து அருகில் பலர் இருந்த போதும், முன்னால் இருந்த மேசையின் மேல் ஏறி கையை உயர்த்தி ஆக்ரோசமாக தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

சம்பவம் இடம்பெற்ற போது அருகில் பிபா கால்பந்தாட்ட தலைவர் , ரஷ்யாவின் ஜனாதிபதி புட்டின், குரோசியா ஜனாதிபதி  கொலின்டா கிறபர் ஆகியோருடன் மழையில் நனைந்தவாறு  தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இறுதிப் போட்டியின் போது குரோசியா ஜனாதிபதி  மற்றும் மெக்ரான் இருவரும் முத்தமிட்டு கட்டியணைத்து வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

குரோசியா அணி வீரர்கள் இருக்கும் அறைக்கு சென்ற பிரான்ஸ் ஜனாதிபதி, அங்கிருந்த குரோசியா நாட்டு வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தமை விசேட அம்சமாகும்.

இந்நிலையில் குறித்த  இருநாட்டு ஜனாதிபதிகளும் இவ்வாறு நடந்து கொண்டமை அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்ததுடன்  உலகக்கிண்ண போட்டியை விட இருவரதும் செயற்பாடுகள் சமூகவலைத்தளங்களில் பெருமளவில் பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்