(எம்.எம்.மின்ஹாஜ்)

எரி­பொருள் விலை தொடர்­பாக அர­சாங்­கத்­தினால் தயா­ரிக்­கப்­பட்­டுள்ள விலை சூத்­திரம் மக்­களின் கவ­னத்­திற்­காக அடுத்த வாரம் வெளி­யி­டப்­படும் என போக்­கு­வ­ரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அசோக அபே­சிங்க தெரி­வித்தார்.

பெற்றோல் விலைக்கு ஏற்ற வகையில் பஸ் கட்­டண அதி­க­ரிப்பு தொடர்பில் எந்­த­வொரு பேச்­சு­வார்த்­தை­களும் நடத்­தப்­ப­ட­வில்லை. தற்­போ­தைக்கு பஸ் கட்­டணம் அதி­க­ரிக்­கப்­ப­ட­மாட்­டாது என்றும் அவர் குறிப்­பிட்டார்.

பிட்ட கோட்­டேயில் அமைந்­துள்ள ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

எரி­பொருள் விலை அதி­க­ரிப்பு தொடர்­பாக அர­சாங்­கத்­தினால் தயா­ரிக்­கப்­பட்ட விலை சூத்­திரம் இன்னும் மக்­க­ளிடம் பிர­சித்­தப்­ப­டுத்­த­வில்லை. எவ்­வா­றா­யினும் விலை சூத்­திரம் மக்­களின் கவ­னத்­திற்­காக அடுத்த வாரம் வெளி­யி­டப்­படும். அத்­துடன் பெற்றோல் விலைக்கு ஏற்ற வகையில் பஸ் கட்­டண அதி­க­ரிப்பு தொடர்பில் எந்­த­வொரு பேச்­சு­வார்த்­தை­களும் இது­வரை நடத்­தப்­ப­ட­வில்லை. ஏற்­க­னவே அண்­மையில் பஸ் கட்­டணம் அதி­க­ரிக்­கப்­பட்­ட­மை­யினால் இரண்டு வரு­டங்­க­ளுக்கு பஸ் கட்­டண அதி­க­ரிப்­பினை கோர முடி­யாது. தனியார் பஸ் சங்­கத்­தி­ன­ரு­ட­னான ஒப்­பந்­தத்­திற்கு அமைய தற்­போ­தைக்கு பஸ் கட்­டணம் அதி­க­ரிக்­கப்­ப­ட­மாட்­டாது. 

அத்­துடன் எரி­பொருள் விலை அதி­க­ரிப்­பினால் இலங்கை போக்­கு­வ­ரத்து சபைக்கு 102 மில்­லியன் ரூபா மேல­தி­க­மாக செல­விட வேண்டி ஏற்­பட்­டுள்­ளது. எவ்­வா­றா­யினும் நட்­ட­மாக அதனை கருத முடி­யாது. முன்­னைய ஆட்­சியின் போது விற்­பனை செய்­யப்­பட்ட பெற்­றோலின் விலையை நாம் இன்னும் மிஞ்­ச­வில்லை. முன்­னைய ஆட்­சியை பார்க்­கிலும் குறை­வான விலைக்கே பெற்­றோலை விற்­கின்றோம். எனினும் உலக சந்­தையில் பெற்­றோலின் விலை குறையும் மக்­க­ளுக்கு அந்த சலு­கையை வழங்­குவோம். நாட்டில் மொத்­த­மாக 52 இலட்சம் குடும்­பங்கள் வாழ்­வ­துடன் 72 இலட்சம் வாக­னங்கள் பதிவு செய்­யப்­பட்டு உள்­ளன. 

இதில் 40 இலட்சம் மோட்டார் சைக்­கிள்­களும் 12 இலட்சம் முச்­சக்­கர வண்­டி­களும் 8 இலட்சம் கார்­களும் ஒரு இலட்சம் பஸ்­களும் 4 இலட்சம் வேன்­களும் 3 இலட்­சத்து 75 ஆயிரம் வரை­யான லொறி­களும் உள்­ளன. எமது அர­சாங்­கத்தின் பெற்றோல்  விலை அதி­க­ரிப்­பினால் முன்­னைய காலங்­களை விட வாகன உரி­மை­யா­ளர்­க­ளுக்கு ஓர­ளவு இலாபம் உள்­ளது. 

தற்­போது இலங்கை போக்­கு­வ­ரத்து சபையை இலாபம் ஈட்டும் நிறு­வ­ன­மாக மாற்­றி­யுள்ளோம். இதன்­படி முதற்­த­ட­வை­யாக 161 கோடி ரூபா இலாபம் அடைந்­துள்­ளது. புதி­தாக ஊழி­யர்­களை சேவையில் இணைப்­ப­தனை நிறுத்­தி­ய­துடன் 4000 பேரை தன்­னிச்­சை­யாக ஓய்வு பெற செய்தோம்.

இதுவே  இந்த இலா­பத்­திற்கு கார­ண­மாகும். நாம் புதி­தாக 500 பஸ்­களை இறக்­கு­மதி செய்­ய­வுள்ளோம். 54 ஆச­னங்­களை கொண்ட பஸ்கள் நானூறும் 35 ஆச­னங்­களை கொண்ட பஸ்கள் 100 ம் இறக்குமதி செய்யவுள்ளோம். இதற்கு அப்பால் நவீன முறைமையிலான பஸ்களை ஹங்கேரியில் இருந்து இறக்குமதி செய்யவுள்ளோம்.  இதன்படி ஹய்பிரிட் வகை பஸ்கள் 750, மின்சாரத்தில் இயங்கும் பஸ்கள் 250 ஐ இறக்குமதி செய்யவுள்ளோம். அடுத்த புத்தாண்டுக்கு முன்னர் குறித்த பஸ்கள் சேவைக்கு உட்படுத்தப்படும்.