நாங்கள் இங்கிருந்து கொண்டு காணி அதிகாரத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றோம். மறுபக்கம் வடகிழக்கு மாகாணங்களில் பல காணிகள் வனலாக, வன ஜீவராசிகள் திணைக்களங்களினாலும் மற்றும் அரச காணி புனித தலங்களுக்கான நிலம் என்ற அடிப்படையிலும் விழுங்கப்பட்டு கொண்டிருக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமாக இருந்தால் நல்லிணக்கத்திற்கு எதிரான முரண்பாடான செயற்பாடுகளை செய்யக்கூடாது. ஆனால் இன்று நல்லிணக்கம் என்று சொல்லிக் கொண்டு மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் வடக்கு, கிழக்கு போன்ற பிரதேசங்களில் ஏதோ ஒரு விதத்தில் காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கைகளையே மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் ஒன்று அரச காணி என்று சொல்லுகின்றார்கள், மகாவலி காணி என்று சொல்லுகின்றார்கள், எல்.ஆர்.சீ நிலம் என்று கூறுகின்றார்கள் இதைவிட வன பரிபாலன திணைக்களத்தின் காணி என்று  சொலிகின்றார்கள், வன ஜீவராசிகளுக்குரிய நிலம் என்று சொல்கின்றார்கள் அதுமட்டுமல்ல புனித நிலம் என்றுகூட பல நிலங்கள் பிரகடணப்படுத்தப்பட்டு வருகின்றது.

எனவே இவ்வாறான நடவடிக்கையின் மூலமாக எதிர்காலத்தில் மக்களுக்கு குடியேறி வாழ்வதற்கு நிலம் இல்லாமல் போகக் கூடிய சூழ்நிலை இருக்கின்றது.

அத்துடன் நாங்கள் வருடக்கணக்கில் இங்கிருந்து காணி அதிகாரத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றோம் ஆனால் எமது பிரதேச காணிகள் மறைமுகமான பல வழிகளாலும் அபகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஆகவே இச் செயற்பாட்டை அரசாங்கம் உடன் நிறுத்த வேண்டும் என்றார்.