ரஷ்யாவுடன் அளவுகடந்த நட்புறவை எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

உலககளவில் பலராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆகியோருக்கிடையிலான முதற்கட்ட பேச்சுவார்த்தை ஹெல்சின்கி நகரில் நடைபெற்றது.

அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த ஆண்டு டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதன் பின் இதுவரை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசியது இல்லை. ஜேர்மனி மற்றும் வியட்நாமில் நடந்த பொருளாதார மாநாடுகளில் இரு தலைவர்களும் அதிகாரபூர்வமற்ற முறையில் சந்தித்தது மட்டுமின்றி, தொலைபேசி வாயிலாகவும் பேசி இருக்கின்றனர்.

இந்தநிலையில், பின்லாந்து நாட்டின் தலைநகரான ஹெல்சின்கி நகரிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று டிரம்ப் - புட்டின் சந்தித்து பேச்சுவார்ததை நடத்தினர். 

இதன்போதே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ரஷ்யாவுடன் அளவுகடந்த நட்புறவை எதிர்பார்ப்பதாகவும் ரஷ்யாவுடன் மிகச் சிறப்பான உறவுகள் எதிர்காலத்தில் ஏற்படுமென தெரிவித்துள்ளார்.