தெற்காசியர்களில் நான்கில் ஒருவர் தைரொய்ட் பாதிப்பிற்கு ஆளாகிறார்கள் என்றும், இதில் ஆண்களை விட பெண்கள் அதிகம் எனவும் அண்மைய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

ஒவ்வொரு ஆணைக் காட்டிலும் பெண்களுக்கு அவர்களின் வாழ்க்கையில் எட்டு முதல் பத்து முறை தைரொய்ட் பாதிப்பிற்கு ஆளாகுவதும் அதிகரித்திருப்பதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தைரொய்ட் சுரப்பின் கோளாறு காரணமாக ஒரு சிலருக்கு ஹைப்போ தைரொய்ட் பாதிப்பும், ஒரு சிலருக்கு ஹைப்பர் தைரொய்ட் பாதிப்பும் ஏற்படுகிறது. இதன் காரணமாக உடல் எடையில் மாற்றம். ஹோர்மோன் சுரப்பியின் சுரத்தலில் மாற்றம். ஹோர்மோன் சுரப்பியின் செயல்பாட்டில் மாற்றம் போன்றவை ஏற்படுகிறது. இதனால் நோயெதிர்ப்பு ஆற்றல் பாதிப்பிற்குள்ளாகிறது.

ஒவ்வொருவரின் உடலுறுப்புகள் சீராக இயங்கவேண்டும் என்றால் தைரொய்ட் சுரப்பிகளின் செயல்பாடு அவசியமாகிறது. இது பல காரணங்களால் சமச்சீரற்றத்தன்மையுடையதாக மாற்றம் பெறும் போது அவரவர்களின் உடல் நிலையைப் பொறுத்து ஹைப்போ தைரொய்ட் அல்லது ஹைப்பர் தைரொய்ட் பாதிப்பு உருவாகிறது.

ஹைப்பர் தைரொய்ட் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் உடல் எடை குறைவு, தூக்கமின்மை, அதிக தாகம், அதிகமான வியர்வை, கை மற்றும் கைவிரல்களில் நடுக்கம், பலவீனம், வேகமான இதயத்துடிப்பு, பதற்றம் ஆகிய அறிகுறிகள் உண்டாகும். 

அதே போல் ஹைப்போ தைரொட் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் உடல் எடை அதிகரிப்பு குறிப்பாக முகம் வீக்கமடைதல், சோர்வு, மந்தமான மனநிலை, இயல்பை விட குறைவான இதயத்துடிப்பு, உலர் சருமம், மாதவிடாய் சுழற்சியில் ஒழுங்கற்ற நிலை ஆகியவை அறிகுறிகளாகும்.

சிடி ஸ்கேன் பரிசோதனை மூலம் எம்முடைய தைரொய்ட் சுரப்பிகளின் தன்மை மற்றும் செயல்பாட்டை கண்டறியவேண்டும். அதற்கு பின் வைத்தியர்கள் பரிந்துரைக்கும் வைத்திய நடைமுறை மற்றும் வாழ்க்கை நடைமுறையை உறுதியாக பின்பற்றவேண்டும். இதனை அலட்சியப்படுத்தினால் கோமா நிலைக்குக் கூட சென்றுவிடலாம்.

டொக்டர்ஸ்ரீதேவி

தொகுப்பு அனுஷா.